கட்டுமான பொருட்கள் ஏற்றி வந்த லாரிகள் தடுத்து நிறுத்தம்
கேரளாவில் இருந்து கூடலூருக்கு கட்டுமான பொருட்கள் ஏற்றி வந்த லாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
கூடலூர்,
கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களின் எல்லையில் கூடலூர் தாலுகா உள்ளது. இங்குள்ள மக்களுக்கு தேவையான ஜல்லி கற்கள், எம்.சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் கேரளாவில் இருந்து லாரிகளில் கொண்டு வரப்படுகிறது.
இதற்கு கூடலூரை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை 10 மணிக்கு கேரள மாநிலம் மலப்புரத்தில் இருந்து 8-க்கும் மேற்பட்ட லாரிகள் கட்டுமான பொருட்களை ஏற்றி கூடலூர் நோக்கி வந்தன.
அப்போது கீழ் நாடுகாணியில் கூடலூரை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் சிலர், அந்த லாரிகளை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் முகமது ஜாபர் ஷெரிப் மற்றும் தேவாலா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜனார்த்தனன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது கூடலூரை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் கூறும்போது, கேரளாவில் இருந்து அளவுக்கு அதிகமாக கட்டுமான பொருட்கள் லாரிகளில் கொண்டு வரப்படுகிறது. இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்றனர்.
எச்சரிக்கை
இதைக் கேட்ட போலீசார் கூறுகையில், சாலையில் செல்லும் வாகனங்களை தடுப்பதற்கு எந்த உரிமையும் கிடையாது. உங்கள் புகார்களை எழுத்துப்பூர்வமாக தெரிவித்தால் மட்டுமே விசாரணை நடத்தி நடவடிக்கை முடியும்.
ஆவணங்கள் அடிப்படையில் பொருட்களை ஏற்றி நீலகிரிக்குள் வரும் வாகனங்களை தடுக்கக்கூடாது என்று போலீசார் எச்சரித்தனர். பின்னர் தடுத்து நிறுத்தப்பட்ட 8 லாரிகளையும் போலீசார் விடுவித்தனர்.
Related Tags :
Next Story