நீலகிரியில் 90 சதவீத அரசு பஸ்கள் ஓடவில்லை


நீலகிரியில் 90 சதவீத அரசு பஸ்கள் ஓடவில்லை
x
தினத்தந்தி 25 Feb 2021 7:26 PM IST (Updated: 25 Feb 2021 7:30 PM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தால் நீலகிரியில் 90 சதவீத அரசு பஸ்கள் ஓடவில்லை. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.

ஊட்டி,

போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 14-வது ஊதிய ஒப்பந்தத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டம், நீலகிரி மாவட்டத்தில் தொடங்கியது. 

இங்கு ஊட்டி-1, ஊட்டி-2, கூடலூர், கோத்தகிரி, குன்னூர் ஆகிய 5 போக்குவரத்து பணிமனைகள் உள்ளன. இங்கிருந்து 310 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் கண்டக்டர்கள், டிரைவர்கள் நேற்று பணிக்கு வராமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊட்டியில் இருந்து குன்னூர், கூடலூர், மஞ்சூர், கோத்தகிரி மற்றும் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு அரசு பஸ்கள் மிகவும் குறைவாக இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர். 

வாக்குவாதம்

இதற்கிடையே போக்குவரத்து பணிமனையில் பஸ்களை நிறுத்திவிட்டு தங்களது வழித்தட வசூலை போக்குவரத்து அதிகாரியிடம் காண்பித்து, பதிவு செய்வதற்காக கண்டக்டர்கள் சென்றனர். 

அப்போது வசூலை அவர் வாங்க மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வழித்தட வசூல் சீட்டில் தன்னிச்சையாக பஸ் நிறுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. 

தொடர்ந்து போக்குவரத்து தொழிலாளர்கள் போக்குவரத்து பணிமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் வழித்தட வசூல் வாங்கப்பட்டது. 

90 சதவீத பஸ்கள்

நீலகிரியில் நேற்று 21 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது. 90 சதவீத பஸ்கள் இயக்கப்படவில்லை. அவை பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. 

இதனால் செல்ல வேண்டிய இடங்களுக்கு ஆட்டோ, வாடகை வாகனங்களில் ஏறி பயணிகள் சென்றனர்.
இதையடுத்து ஊட்டியில் இருந்து குன்னூர், மேட்டுப்பாளையத்துக்கு தனியார் மினி பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நகர்ப்புறங்களில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவுக்குள் மினி பஸ்கள் இயக்க அனுமதி உள்ளது. ஆனால் அரசு பஸ் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தால், 

தனியார் மினி பஸ்கள் தொலைதூரத்துக்கு இயக்க தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டது. ஆனால் பயணிகள் அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை காணப்பட்டது. 

கூடலூர்

கூடலூர், பந்தலூர், மசினகுடி, சேரம்பாடி, எருமாடு, கொளப்பள்ளி, தேவர்சோலை, பிதிர்காடு, பாட்டவயல் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. 

மேலும் கூடலூரில் இருந்து திருப்பூர், கோவை, சென்னை, ஈரோடு உள்பட வெளிமாவட்டங்களுக்கும் பஸ்கள் செல்லவில்லை. இதனால் ஆட்டோ, ஜீப் அதிகளவு இயக்கப்பட்டது. 

இதையொட்டி முக்கிய நகர பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. ஆனால் கர்நாடக மாநிலத்தில் இருந்து கூடலூர், ஊட்டி பகுதிக்கு வழக்கம்போல பஸ்கள் இயக்கப்பட்டது.


Next Story