மாநில எல்லையில் வாகன சோதனை தீவிரம்


மாநில எல்லையில் வாகன சோதனை தீவிரம்
x
தினத்தந்தி 25 Feb 2021 7:26 PM IST (Updated: 25 Feb 2021 7:32 PM IST)
t-max-icont-min-icon

‘கொரோனா இல்லை’ சான்றிதழ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டதால், மாநில எல்லையில் வாகன சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கூடலூர்

‘கொரோனா இல்லை’ சான்றிதழ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டதால், மாநில எல்லையில் வாகன சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

மேலும் இ-பதிவு செய்யாத சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

தீவிர வாகன சோதனை

கேரளா, மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை மீண்டும் வேகமாக உயர்ந்து வருகிறது. 

இதையொட்டி தமிழகத்துக்குள் வர வெளிமாநில சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

கேரள, கர்நாடக மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இ-பதிவு மற்றும் ‘கொரோனா இல்லை’ என்ற சான்றிதழ் கட்டாயம் பெற்றிருந்தால் மட்டுமே நீலகிரி மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிவித்தார். 

இதனால் நீலகிரி மாவட்ட எல்லைகளில் தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது.

ஆய்வு
இந்த நிலையில் நீலகிரி-கேரள எல்லைகளான நாடுகாணி, பாட்டவயல், தாளூர், சோலாடி மற்றும் நீலகிரி-கர்நாடக எல்லையான கக்கநல்லா ஆகிய இடங்களில் உள்ள

சோதனைச்சாவடிகளில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு சுற்றுலா பயணிகள் ‘கொரோனா இல்லை’ என்ற சான்றிதழ் வைத்துள்ளார்களா? என்று ஆய்வு செய்து வருகின்றனர். 

மேலும் சான்றிதழ் இல்லாத சுற்றுலா பயணிகளிடம் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட தகவல்களை பெற்றுக்கொண்டு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

வாக்குவாதம்

இது தவிர வெளிமாநில சுற்றுலா பயணிகள் இ-பதிவு செய்துள்ள ஆவணங்கள் வைத்துள்ளார்களா? என்று விசாரணை நடத்தி நீலகிரிக்குள் அனுமதித்து வருகின்றனர். 

மருத்துவ சான்றிதழ் இல்லாத மற்றும் இ-பதிவு செய்யாத சுற்றுலா பயணிகளை அனுமதிக்காமல், போலீசார் திருப்பி அனுப்பி வருகின்றனர்.

 இதனால் சுற்றுலா பயணிகளுக்கும், சுகாதாரத்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.

ஒத்துழைக்க வேண்டும்

இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறியதாவது:-
வெளிமாநில சுற்றுலா பயணிகள் இ-பதிவு செய்ய வேண்டும். பின்னர் அதன் நகலை கையில் வைத்திருக்க வேண்டும்.

 மேலும் அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள சுகாதாரத்துறையினரிடம் மருத்துவ பரிசோதனை செய்து, ‘கொரோனா இல்லை’ என்ற சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 

இந்த நடைமுறையை பின்பற்றினால் மட்டுமே தமிழகத்துக்குள் அனுமதிக்கப்படும். எனவே இந்த விதிமுறைகளை பின்பற்றி அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story