பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு கடன் கேட்டு நூதன மனு
தேனியில் பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு கடன் கேட்டு நூதன மனு அளித்தனர்.
தேனி:
பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாணவர் அமைப்பின் தேசியக்குழு உறுப்பினர் திவாகர் தலைமையில் நிர்வாகிகள் சிலர், தேனி நகர் பெரியகுளம் சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு நேற்று வந்தனர்.
அங்கு வங்கி அதிகாரிகளை சந்தித்து அவர்கள் வாகனங்களில் பெட்ரோல், டீசல் நிரப்புவதற்கு தனிநபர் கடன் கேட்டு மனு அளித்தனர்.
அந்த மனுவில், "கொரோனா பேரிடரால் நடுத்தர, ஏழை, எளிய மக்கள் வாழ்வாதாரம் இழந்து வறுமையில் வாடுகின்றனர்.
இந்நிலையில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் மீதான மத்திய, மாநில அரசுகளின் வரி உயர்வால் அவற்றின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. இந்த கடுமையான விலை ஏற்றத்தால் நடுத்தர, ஏழை, எளிய மக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
எனவே, அவர்களின் பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த கல்வி மற்றும் வாகனங்களுக்கு வங்கிக்கடன் வழங்குவது போல் நாட்டு மக்களின் அத்தியாவசிய அடிப்படை தேவையான பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் வாங்குவதற்கும் தனிநபர் கடன் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறியிருந்தனர்.
Related Tags :
Next Story