தெப்பம் கட்டும் பணி தீவிரம்


தெப்பம் கட்டும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 25 Feb 2021 11:15 PM IST (Updated: 25 Feb 2021 11:15 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவில் தெப்ப திருவிழாவிற்காக கோவில் தெப்பக்குளத்தில் தெப்பம் கட்டும்் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருப்பத்தூர், 
திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவில் தெப்ப திருவிழாவிற்காக கோவில் தெப்பக்குளத்தில் தெப்பம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தெப்ப திருவிழா
திருப்பத்தூர் அருகே உள்ளது திருக்கோஷ்டியூர். இங்கு சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட ஸ்ரீ சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக தெப்ப உற்சவ விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதையொட்டி இந்தாண்டு இந்த விழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 
இதையொட்டி தினந்தோறும் சவுமிய நாராயண பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அனுமன் வாகனம், கருட சேவை, தங்க சேஷ வாகனம், தங்க குதிரை வாகனம், அன்ன வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று வெண்ணெய் தாழி சேவையில் அருள்பாலிக்கிறார். 9-ம் திருநாள் இன்று பகல் 12 மணிக்கு தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தீவிரம் 
நாளை 10-ம் திருநாள் அன்று காலை 10.50 மணி முதல் 11.58-க்குள் பகல் தெப்ப உற்சவமும், இரவு 9 மணிக்குள் மின்னொளியில் தெப்பம் கண்டருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதற்காக தற்போது கோவில் தெப்பக்குளத்தில் தெப்பம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
இதுதவிர ஏற்கனவே கோவில் தெப்பக்குளம் சுவரை சுற்றியிலும் தடுப்பு கம்பி வேலி போடப்பட்டுள்ளதால் அதற்கு வெளியே பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்யவும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் போது பக்தர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற வேண்டி எண்ெணைய் விளக்கேற்றி வழிபாடு செய்வது வழக்கம்.
ஏராளமான பக்தர்கள் 
இதற்காக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து தெப்ப திருவிழா அன்று விளக்கேற்றி வழிபாடு செய்வார்கள். அவ்வாறு அவர்கள் விளக்கேற்றி வழிபாடு செய்வதற்கான இடங்களையும் சுத்தம் செய்து தயாராகும் பணியும் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. முன்னதாக ஏற்கனவே பெய்த மழை காரணமாக கோவில் குளம் நிரம்பி காணப்படும் வேளையில் தற்போது மற்ற பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தெப்பத்திருவிழா அன்று சிறப்பு அலங்காரத்தில் கோவிலில் இருந்து புறப்பாடாகி தெப்பக்குளத்தில் உள்ள மண்டபத்தில் சாமி எழுந்தருளுகிறார். இதற்காக இந்த மண்டபமும் தயாராகும் பணியும் நடைபெற்று வருகிறது. இதுதவிர தெப்பக்குளத்தை சுற்றி புறக்காவல் நிலையம் அமைக்கும் பணியும், கூட்ட நெரிசலை போலீசார் உயரத்தில் நின்று கண்காணிக்கும் வகையில் தெப்பக்குளத்தை சுற்றி உயர் கோபுரம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. மேலும் திருக்கோஷ்டியூர் சாலையின் இருபுறத்திலும் இத்திருவிழாவையொட்டி திருவிழாவிற்காக ஏராளமான கடைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Next Story