தர்பூசணி விற்பனை விறுவிறுப்பு
கோடைகாலம் தொடங்க இருப்பதையொட்டி சிவகங்கை மாவட்டம் முழுவதும் தர்பூசணி விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
காரைக்குடி,
கோடைகாலம் தொடங்க இருப்பதையொட்டி சிவகங்கை மாவட்டம் முழுவதும் தர்பூசணி விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கோடைகாலம்
ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடைகாலம் தொடங்கிவிடுவது வழக்கம். அதிலும் குறிப்பாக மே மாதங்களில் வரும் அக்னி நட்சத்திரம் தொடங்கும் போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பது வழக்கம். இந்த அக்னி நட்சத்திர தாக்கம் குறைந்தது 15 முதல் 25 நாட்கள் வரை இருக்கும். இவ்வாறு கோடைகாலம் தொடங்கி விட்டாலே பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். பொதுவாக கோடைக்காலம் தொடங்கினாலே குளு, குளு குளிர்பானங்கள், இளநீர், தர்பூசணி பழங்கள், வெள்ளரி பழங்கள், பழச்சாறுகள் ஆகியவைதான் நினைவுக்கு வரும். அதிலும் கோடைகாலத்தில் பொதுமக்கள் அதிகம் விரும்புவது தர்பூசணி பழங்கள் தான்.
இந்த பழங்கள் இதயம் முதல் சிறுநீரகம் வரை பாதுகாக்கும் நிவாரணியாக இருந்து வருகிறது. இந்நிலையில் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்னதாகவே மாவட்டத்தில் காரைக்குடி, திருப்பத்தூர், தேவகோட்டை, சிவகங்கை, சிங்கம்புணரி, மானாமதுரை, திருப்புவனம் உள்ளிட்ட பகுதியில் தற்போது வியாபாரிகள் வெளி மாவட்டங்களில் இருந்து லாரிகளில் வாங்கி வந்து சாலையோரங்களில் பழங்களை குவித்து விற்பனை செய்து வருகின்றனர். கோடைகாலம் தொடங்்கும் முன்பே தற்போது தர்பூசணி விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் கடந்தாண்டை விட இந்தாண்டு தர்பூசணி பழங்களின் விலை அதிகரித்துள்ளது.
தர்பூசணி விற்பனை
கடந்த ஆண்டு நிலவிய கொரோனா ஊரடங்கு மற்றும் வட மாவட்டங்களில் பெய்த அதிகளவு கன மழையினால் தர்பூசணி பழங்கள் விலை உயர்ந்துள்ளது. இதுகுறித்து காரைக்குடி சண்முகராஜா சாலை பகுதியில் தர்பூசணி வியாபாரம் செய்து வரும் சேட்முகமது என்ற வியாபாரி ஒருவர் கூறியதாவது:- ஆண்டுதோறும் கோடைகாலத்தில் பொதுமக்கள் அதிகளவு பயன்படுத்தும் தர்பூசணி பழம் வியாபாரம் இந்த பகுதியில் விற்பனை செய்து வருகிறேன். கடந்தாண்டு திண்டிவனம் பகுதியில் இருந்து ஒரு டன் ரூ.10 ஆயிரமாக இருந்த விலை இந்தாண்டு ஒரு டன் ரூ.12 ஆயிரம் வரை விலை உயர்ந்துள்ளது.
இதேபோல் இந்த பழங்களை அங்கிருந்து காரைக்குடிக்கு கொண்டு வர வாடகையாக கடந்தாண்டு ரூ.18 ஆயிரம் வரை கொடுத்தோம். ஆனால் இந்தாண்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக ரூ.22 ஆயிரம் வரை கொடுக்க வேண்டியது உள்ளது. இருப்பினும் கடந்தாண்டு ஒரு கிலோ பழம் ரூ.20-க்கு தான் விற்பனை செய்தேன். அதேபோல் இந்தாண்டும் விற்பனை செய்து வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story