போக்குவரத்துக்கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் உடுமலையில் 40 சதவீத பஸ்கள் இயங்கவில்லை பயணிகள் அவதி
உடுமலை அரசு போக்குவரத்துக்கழகத்தில் தொ மு ச, சி ஐ டி யு, ஏ ஐ டி யு சி உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச்சேர்ந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் 40 சதவீத பஸ்கள் ஓடவில்லை. அதனால் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
உடுமலை:
உடுமலை அரசு போக்குவரத்துக்கழகத்தில் தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச்சேர்ந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் 40 சதவீத பஸ்கள் ஓடவில்லை. அதனால் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
பஸ் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் 14-வது ஊதிய ஒப்பந்தத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று வேலை நிறுத்தப்போராட்டம் நடந்தது.
உடுமலை போக்குவரத்துக்கழக பணிமனையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் மொத்தம் 101 உள்ளன. இதில் 51 பஸ்கள் வெளியூர்களுக்கு செல்லும் பஸ்களாகும். 50 பஸ்கள் டவுன்பஸ்களாகும். இந்த 101 பஸ்களில் 86 பஸ்கள் மட்டும் இயக்கத்தில் இருந்து வந்தன.
33 பஸ்கள் இயக்கப்படவில்லை
உடுமலையில் நேற்று அரசு போக்குவரத்து கழகத்தின், அண்ணா தொழிற்சங்கத்தைச்சேர்ந்தவர்கள் பணிக்கு வந்திருந்தனர். அவர்கள் மூலம் பஸ்கள் இயக்கப்பட்டன. 86 பஸ்களில் வெளியூர் செல்லும் பஸ்கள் 14-ம் டவுன் பஸ்கள் 39ம் எனமொத்தம் 53 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன.
தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணிக்கு வரவில்லை. அதனால் தேவையான அளவிற்கு டிரைவர்கள், கண்டக்டர்கள் இல்லாததால் 33 பஸ்கள் இயக்கப்படவில்லை. இது சுமார் 40 சதவீதம் ஆகும்.
பயணிகள் கூட்டம்
முகூர்த்த நாட்களில் பஸ்களில் பயனிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதன்படி உடுமலையில் நேற்று பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அரசு பஸ்கள் குறைக்கப்பட்டிருந்த நிலையில், தனியார் பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்தது.
பயணிகள் பஸ்சில் சீட் பிடிப்பதற்காக முண்டியடித்துக்கொண்டு ஏறினர். பழனி, பொள்ளாச்சி மற்றும் கோவைக்கு செல்லும் பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
குமரலிங்கம்
இதுபோல் குமரலிங்கம் பகுதியில் 50 சதவீத பஸ்கள் மட்டுமே அண்ணா தொழிற்சங்க தொழிலாளர்களை கொண்டு இயக்கப்பட்டு வருகிறது. அதிக பஸ்கள் இயங்காததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளியூர்களுக்கு செல்லக்கூடிய பஸ்கள் அதிக அளவில் இயக்கப்படவில்லை என்பதால் முகூர்த்த நாளான நேற்று பஸ்கள் இல்லாமல் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
குமரலிங்கம் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களுக்கு செல்லும் பஸ்களும் இயக்கப்படாததால் கூலித்தொழிலுக்கு வேலைக்குச் செல்பவர்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் என பலரும் பாதிப்படைந்துள்ளனர்.
தனியார் பஸ்களில் அதிக அளவு கூட்டம் இருந்ததால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளான, கடத்தூர், கணியூர், காரத்தொழுவு, துங்காவி, மடத்துக்குளம், குமரலிங்கம், மட்டுமின்றி தாராபுரம், பழனி, உடுமலை, பொள்ளாட்சி, திண்டுக்கல், கோவை, போன்ற வெளியூர்களுக்கும் மடத்துக்குளம் பகுதியில் இருந்து தனியார் மற்றும் அரசு பஸ்கள், இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக, மடத்துக்குளம் பகுதியில் உள்ள பெரும்பாலான கிராமங்களுக்கு சென்று வந்த அரசு பஸ்கள் குறைவாக இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் வெகுநேரம் காத்திருந்து ஒரு சில தனியார் பஸ்களில் பயணம் செய்தனர். பலர் நீண்ட நேரம் காத்திருந்ததால் உடல்சோர்வுடன், மன உளைச்சலுடனும் காணப்பட்டனர்.
Related Tags :
Next Story