மயிலாடுதுறை மாவட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
14-வது ஊதிய ஒப்பந்தத்தை அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் குறைவான பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
மயிலாடுதுறை:
14-வது ஊதிய ஒப்பந்தத்தை அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் குறைவான பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
வேலை நிறுத்தம்
அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் 14-வது ஊதிய ஒப்பந்தத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள் அறிவித்தன. அதன்படி நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் தொ.மு.ச., சி.ஐ.டி.யூ.,, ஏ.ஐ.டி.யூ..சி. உள்ளிட்ட தொழிற்சங்க கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். ஆனால் அண்ணா தொழிற்சங்கம் உள்பட ஒரு சில தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடவில்லை.
ஆனாலும் மயிலாடுதுறை அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள 70 பஸ்களில் 12 பஸ்கள் மட்டுமே நேற்று இயக்கப்பட்டன. அதேசமயம் தனியார் பஸ்கள் நேற்று முழுமையாக இயங்கின. குறைந்த அளவில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டதால், பயணிகள் கூட்டம் அலைமோதியது. மேலும் நேற்று சுபமுகூர்த்த தினம் என்பதால் மயிலாடுதுறை நகரில் பொது மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குறைந்த அளவு பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
சீர்காழி
இதேபோல் சீர்காழி அரசு கிளை போக்குவரத்து கழகத்தில் இயக்கப்படும் 41 பஸ்களில் வெறும் 4 பஸ்கள் மட்டுமே பூம்புகார், திருமுல்லைவாசல், மயிலாடுதுறை, சிதம்பரம் ஆகிய ஊர்களுக்கு மட்டும் இயக்கப்பட்டன. இதனால் நேற்று முகூர்த்த காலமாக இருந்ததால் ஏராளமான பயணிகள் புதிய பஸ் நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்து தனியார் பஸ்கள், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் மூலம் ஊர்களுக்கு சென்றனர்.
இதேபோல் பல்வேறு கிராமங்களுக்கு பஸ்கள் இயக்கப்படாததால் பள்ளி மாணவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு அ.தி.மு.க. தொழிற் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகளும் வேலைக்கு வராமல் மறைமுகமாக ஆதரவு தெரிவித்ததால் பஸ்கள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அரசு பஸ்கள் இயக்கப்படாததால் தனியார் பஸ்களில் அளவுக்கு அதிகமான பயணிகள் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
பொறையாறு
பொறையாறு அரசு போக்குவரத்து கழக பணிமனை அனைத்து சங்கங்களை சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு வராமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் பொறையாறில் உள்ள மொத்தம் 22 அரசு பஸ்களில் 6 பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டன. மற்ற பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பொறையாறு பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது நேற்று முகூர்த்த நாள் என்பதால் பல்வேறு சுபநிகழ்ச்சிகளுக்கு சென்ற பொதுமக்கள் பஸ் இல்லாமல் அவதிப்பட்டனர். ஒரு சில தனியார் பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன.
மயிலாடுதுறை மாவட்டத்்தில் மயிலாடுதுறை, சீர்காழி, பொறையாறு ஆகிய ஊர்களில் உள்ள 3 அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள மொத்தம் 133 பஸ்களில் 22 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story