ஓட்டல் மேற்பார்வையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை பணம் திருட்டு


ஓட்டல் மேற்பார்வையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை பணம் திருட்டு
x
தினத்தந்தி 26 Feb 2021 12:37 AM IST (Updated: 26 Feb 2021 12:37 AM IST)
t-max-icont-min-icon

பல்லடத்தில் ஓட்டல் மேற்பார்வையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை பணத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர்.

பல்லடம்
பல்லடத்தில், ஓட்டல் மேற்பார்வையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை, பணத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். 
  இது குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:- 
வீட்டு பூட்டை உடைத்து
பல்லடம் - தாராபுரம் ரோடு தனியார் காம்பவுண்டில் வசிப்பவர் செந்தில்குமார்(வயது 41). இவர் பல்லடத்தில் உள்ள ஓட்டலில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மலர்விழி (35).
இந்த நிலையில், உறவினர் இல்ல திருமணத்திற்காக கணவன்-மனைவி இருவரும் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு கோவைக்கு சென்று விட்டனர். பின்னர் திருமணம் முடிந்து, நேற்று காலை அவர்கள் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
நகை பணம் திருட்டு
பின்னர் கணவன்-மனைவி இருவரும் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, வீட்டின் உள்ளே பீரோ உடைக்கப்பட்டு உள்ளே இருந்த துணிமணிகள் சிதறிக் கிடந்தன. லாக்கரும் திறக்கப்பட்டு கிடந்தது. பீரோ மற்றும் லாக்கரில் வைக்கப்பட்டு இருந்த 8 பவுன்நகை மற்றும் ரூ.20 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர். இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு விரைந்து வந்து  விசாரணை நடத்தினர். மேலும்இந்த திருட்டு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
 திருட்டு குறித்து செந்தில்குமார் கூறியதாவது “திருமணத்துக்கு செல்லும் அவசரத்தில் பீரோவில் சாவியை விட்டு சென்றுவிட்டோம். திருட்டு பயம் இருப்பதால் மனைவி தங்கச்சங்கிலியை பீரோவில் வைத்துவிட்டு கவரிங் செயின் அணிந்து வந்தார். ஆனால் வீட்டிலேயே திருடர்கள் புகுந்து திருடி விட்டனர்” என்றார். 

Next Story