நாமக்கல் மாவட்டத்தில் 90 சதவீத பஸ்கள் இயக்கம்


நாமக்கல் மாவட்டத்தில் 90 சதவீத பஸ்கள் இயக்கம்
x
தினத்தந்தி 26 Feb 2021 12:41 AM IST (Updated: 26 Feb 2021 12:41 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 30 சதவீத போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டாலும், 90 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன.

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 30 சதவீத போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டாலும், 90 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன.
வேலைநிறுத்தம்
அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 14-வது ஊதிய ஒப்பந்தத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தொழிலாளர் முன்னேற்ற சங்கம், சி.ஐ.டி.யு. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் அறிவித்து இருந்தன. அதன்படி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் நேற்று தொடங்கியது.
நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு உள்பட 4 இடங்களில் அரசு போக்குவரத்து கழக பணிமனைகள் உள்ளன. இவற்றில் சுமார் 300 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் டிரைவர், கண்டக்டர், தொழில்நுட்ப பணியாளர்கள் என 1,500-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் நேற்று சுமார் 30 சதவீதம் பேர் பணிக்கு வராமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
90 சதவீத பஸ்கள் இயக்கம்
இருப்பினும் மாவட்டம் முழுவதும் 90 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் வெளியூரில் இருந்து வரும் பஸ்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. நாமக்கல் பஸ்நிலையத்தில் கூடி இருந்த தொ.மு.ச., சி.ஐ.டி.யு. உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டியவாறு இருந்தனர். அப்போது அவர்கள் போக்குவரத்து அதிகாரிகள், டிரைவர்களை மிரட்டி தொடர்ச்சியாக பஸ்களை இயக்க சொல்வதாக குற்றம் சாட்டினர். இன்னும் ஓரிரு நாட்களில் போராட்டம் தீவிரம் அடையும் என்றும் கூறினர்.
நாமக்கல் நகரை பொறுத்த வரையில் பெரும்பாலான பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படவில்லை. வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி பணிமனை உள்ளிட்ட இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story