அனைவரும் தேர்ச்சி: பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் கருத்து
9,10,11-ம் வகுப்பில் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடனும், மாணவர்கள் வருத்தமாகவும் தெரிவித்துள்ளனர்.
கரூர்
அனைவரும் தேர்ச்சி
தமிழக சட்டமன்றத்தில் நேற்று 9, 10 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான தேர்வு இன்றி, அனைத்து மாணவ-மாணவிகளும் ‘ஆல்பாஸ்’ என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதுகுறித்து கரூர் மாவட்ட ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கூறிய கருத்துகள் பின்வருமாறு:-
கரூர் நகராட்சி பள்ளி ஆசிரியர் காமராஜ்:- கொரோனா நோய் தொற்று 2-வது அலையாக பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. இதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பு பாராட்டத்தக்கது.
மனதளவில் பாதிக்கக்கூடும்
அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் வடிவேல்:-
கொரோனாவின் தாக்கத்தால் கடந்த சில மாதங்களாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. பின்னர் கடந்த ஜனவரி மாதம் 19-ந்தேதி முதல் 10-ம் வகுப்பிற்கு பள்ளிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. குறுகியகாலத்தில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டால் மாணவர்கள் மனதளவில் பாதிக்கக்கூடும். இதனை ஆராய்ந்து தற்போது பொதுத் தேர்வை ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ஆசிரியர்கள் தங்கள் கடமையை உணர்ந்து மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தலில் தொடர்ந்து செயல்பட்டு மாணவர்களின் தனித்திறன்களை வெளிக்கொண்டு வர வேண்டும்.
பயமின்றி படிக்க முடியும்
க.பரமத்தி அருகே உள்ள எல்லார் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் வீ.கவுதமன்:-
9, 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பாராட்டுக்குரியது. மிக குறைந்த கால அளவில் பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் தயாராவது உளவியல் ரீதியாக மனச்சுமை தருவதாகும். பொதுத்தேர்வின்றி பயிலும் மாணவர்களில் பாதிபேர் தேர்வு பயமின்றி படிக்க முடியும்கொேரானா போன்ற மருத்துவப் பேரிடர் காலத்தில் அரசின் இந்த முடிவு வரவேற்கத் தக்கது.
மகிழ்ச்சி அளிக்கிறது
ஜெகதாபி அரசு மாதிரி மேல்ப்நிலைப்பள்ளி ஆசிரியர் ப.காமாட்சி:-
கேரளா, மராட்டியம் உள்பட சில மாநிலங்களில், கொரோனாவின் பாதிப்பு தற்போது அதிகரித்து கொண்டு வருகிறது. இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் முதல்-அமைச்சரின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு உண்டாகும் கல்வியை பற்றிய மன அழுத்தத்தை குறைந்து ஆறுதல் தரும்.
தேர்வுக்கு தயாராக முடியாது
கரூர் நகர்மன்ற குமரன் உயர்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவி நிவேதிதா:-
கொரோனாவால் 9 மாதங்களாக பள்ளிக்கு வராமல் கடந்த ஒரு மாதமாகத்தான் பள்ளிக்கு வருகிறோம். இன்னும் 2 மாதங்களுக்குள் அனைத்து பாடங்களையும் படித்து தேர்வுக்கு தயாராக முடியாது. பொதுத்தேர்வை எண்ணி பயமாக இருந்தது. இந்நிலையில் பொதுத்தேர்வு இல்லை என்று அறிவித்தது மகிழ்ச்சி தருகிறது.
வருத்தம் அளிக்கிறது
கரூர் பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் சிவபாரதி:-
அனைவரும் தேர்ச்சி என்பது மிகவும் வருத்தமான செய்தி. ஏற்கனவே 10-ம் வகுப்பி லும் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது. தற்போது 11-ம் வகுப்பில் மாணவர் தேர்ச்சி என்றால் அடுத்து 12-ம் வகுப்பில் பாடங்கள் எந்த மாதிரி அமையும் என்று தெரியவில்லை. இப்போது 11-ம் வகுப்பில் பாடங்கள் குறைக்கப்பட்டது காரணமாக முழுமையாக எங்களால் பாடங்கள் புரிந்து கொள்ள இயலவில்லை. எனவே அடுத்து வரும் 12-ம் வகுப்பில் வரும் பாடங்கள் 11-ம் வகுப்பு பாடங்களே கவர் செய்வதுபோல அமைந்தால் கல்லூரிகளில் எளிதாக படிக்க இயலும். மேலும் 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பாடங்கள் சேர்த்து அடுத்த கல்வி ஆண்டில் நாங்கள் படித்தாலும் கூட எங்களுக்கு அது பெரும் தலைவலியாகவே அமையும்.
நினைத்துக்கூட பார்க்கவில்லை
கரூர் பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவர் இர்ஷாத்:-
நான் கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறேன். அனைவரும் தேர்ச்சி என்பதை நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. மிகவும் சந்தோஷமாக உள்ளது. ஏனென்றால் பள்ளி திறந்து ஒரு மாதம் மட்டுமே ஆகிறது. இந்த ஒரு மாதத்தில் படித்து தேர்வு எழுதுவது என்பது மிகவும் கடினமான ஒன்று. முன்பு ஆன்லைன் வகுப்புகள் நடந்தாலும், பள்ளியில் படிப்பது போன்று அது அமையவில்லை.
ஆர்வம் குறைகிறது
புகளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு மாணவர் சதீஷ்குமார்:-
9,10,11-ம் மாணவர்கள் தேர்ச்சி என்பது தவறு. படித்து, தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவதான் நல்லது. அதுதான் மாணவர்களின் உண்மையான தகுதியாகும். அரசே இப்படி செய்வது, மாணவர்கள் படிக்கும் ஆர்வம் குறைக்கிறது. இது மிகவும் தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது.
மனக்கஷ்டம் அளிக்கிறது
குளித்தலை பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் ஆர்.கார்த்திக் கேயன்:-
பொதுத்தேர்வுக்காக எங்களை தயார் படுத்திக் கொண்டிருந்த இந்த சூழ்நிலையில், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் மனக்கஷ்டமாகவும், ஒருபுறம் மகிழ்ச்சியாகவும் உள்ளது. இருப்பினும் 11-ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடத்தி இருக்கலாம்.
கடினமாக இருந்தது
குளித்தலை பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி வி.ராஜ்பிரியா:-
ஊரடங்கின்போது பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், மீண்டும் இந்த மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிக்கு செல்வது மகிழ்ச்சியாக இருந்தாலும், பாடங்களை படிப்பது சற்று கடினமாக இருந்தது. பின்னர் ஆசிரியர்கள் எங்களுக்கு தீவிரமாக பயிற்சி கொடுத்து வந்தனர். இந்தநிலையில் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
முதல்-அமைச்சருக்கு நன்றி
நொய்யல் அருகே உள்ள ஈவேரா அரசு மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு மாணவி சக்திசுந்தரி:-
மார்ச் மாதம் முழு ஆண்டு தேர்வு நடைபெற இருந்த நிலையில், நாங்கள் பள்ளிக்கு வந்து படிப்பை தொடங்கினோம். இதனால் முழுமையாக அனைத்து பாடங்களையும் கற்றுத் தெரிந்து கொள்ள முடிந்தது. ஆன்லைன் வகுப்பு மூலம் சரியாக தெரிந்து கொள்ள முடியவில்லை. அனைவரும் தேர்ச்சி என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தேர்வு எழுதி இருந்தால் மிகக் குறைந்த மதிப்பெண்கள் மட்டுமே வாங்கி இருக்க முடியும். அதனால் நாங்கள் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு ஆசிரியர்கள், மாணவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story