குமரியில் 50 சதவீத அரசு பஸ்கள் ஓடவில்லை


குமரியில் 50 சதவீத அரசு பஸ்கள் ஓடவில்லை
x
தினத்தந்தி 26 Feb 2021 1:07 AM IST (Updated: 26 Feb 2021 1:07 AM IST)
t-max-icont-min-icon

குமரியில் பஸ் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் 50 சதவீத அரசு பஸ்கள் ஓடவில்லை. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

நாகர்கோவில், 
குமரியில் பஸ் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் 50 சதவீத அரசு பஸ்கள்  ஓடவில்லை. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
வேலை நிறுத்த போராட்டம்
அரசு போக்குவரத்து கழகங்களுக்கு அரசு நிதி வழங்க வேண்டும், மற்ற துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும், போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட ே்காரிக்கைகளை வலியுறுத்தி தொ.மு.ச., சி.ஐ.டி.யு.. ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ்., டி.டி.எஸ்.எப்., எம்.எல்.எப்., ஏ.ஏ.எல்.எப்., டி.டபிள்யூ.யு. ஆகிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் 25-ந் தேதி (நேற்று) முதல் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி மாநிலம் முழுவதும் நேற்று அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து கழக நாகர்கோவில் மண்டலத்தில் வழக்கமாக 818 பஸ்கள் இயக்கப்படும். கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு கேரள மாநிலத்துக்கான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் 760 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
50 சதவீத பஸ்கள் ஓடின
இந்தநிலையில் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியதையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள 12 பணிமனைகளில் இருந்து குறைவான அளவில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. நேற்று அதிகாலையில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டாலும் வழக்கமான நேரத்தில் இருந்து சற்று தாமதமாக பஸ்கள் இயக்கப்பட்டன. நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து வெளி மாவட்டங்கள், உள்மாவட்ட பகுதிகளுக்கு வழக்கத்தை விட குறைவாக அதாவது 50 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன.
அதேபோல் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்தும் உள்மாவட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் வழக்கமான பஸ் போக்குவரத்தை நேற்று நாகர்கோவில் நகரில் காண முடியவில்லை.
பயணிகள் அவதி
குறைந்த அளவில் பஸ்கள் ஓடியதால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள். தாங்கள் செல்லும் இடங்களுக்கு சரியான நேரத்தில் செல்ல முடியாமல் அவதியடைந்தனர்.
இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கவில்லை. ஆனால் மற்ற தொழிற்சங்கங்களைச் சேர்ந்த அரசு போக்குவரத்துக்கழக டிரைவர்கள், கண்டக்டர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் பெருமளவில் கலந்து கொண்டதால் தற்காலிக பணி அடிப்படையில் (சி.எல்.ஆர்.) டிரைவர், கண்டக்டர்களை அதிகாரிகள் பணிக்கு அமர்த்தி பஸ்களை ஓட்டினர்.
மேலும் சில சங்கங்கள் ஆதரவு
இதுதொடர்பாக அரசு போக்குவரத்துக்கழக தொ.மு.ச. நாகர்கோவில் மண்டல பொதுச்செயலாளர் சிவன்பிள்ளை கூறியதாவது:-
அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி குமரி மாவட்டத்தில் 50 சதவீத பஸ்கள் தான் ஓடின. அதாவது மொத்தம் 818 அரசு பஸ்கள் உள்ளன. அதில் 460 பஸ்கள் தான் ஓடின. அதுவும் நேற்று முன்தினம் பணிக்குச் சென்ற டிரைவர்கள், கண்டக்டர்கள் பணிபுரிய வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். அதனால் தான் நேற்று 150 பஸ்கள் வரை கூடுதலாக ஓடியுள்ளன. இல்லாவிட்டால் 300 பஸ்கள் தான் ஓடியிருக்கும். அதுவும் சி.எல்.ஆர். டிரைவர், கண்டக்டர்களை வைத்து அதிகாரிகள் பஸ்களை ஓட்டியுள்ளனர். எங்களது போராட்டத்துக்கு மேலும் சில சங்கங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. எனவே போராட்டம் தொடர்ந்தால் பஸ்கள் குறைவான எண்ணிக்கையில் தான் ஓடும் என்றார்.
800 பேர்
அரசு போக்குவரத்துக்கழக நாகர்கோவில் மண்டல உயர் அதிகாரிகள் கூறும்போது, நாகர்கோவில் மண்டலத்தில் இருந்து 75 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. ஊழியர்களை பொறுத்தவரையில் 5 ஆயிரம் பேரில் நேற்று 800 பேர் தான் பணிக்கு வரவில்லை என்றார்.

Next Story