வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது


வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது
x
தினத்தந்தி 25 Feb 2021 7:41 PM GMT (Updated: 25 Feb 2021 7:41 PM GMT)

குமரி மாவட்டத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு நேற்று தொடங்கியது. முதல்நாளில் சிறுத்தை மற்றும் புலியின் கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

நாகர்கோவில், 
குமரி மாவட்டத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு நேற்று தொடங்கியது. முதல்நாளில் சிறுத்தை மற்றும் புலியின் கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
வனவிலங்குகள்  கணக்கெடுப்பு
குமரி மாவட்ட வன உயிரின சரணாலயத்தில் யானை, மான், மிளா, கரடி, செந்நாய், புலி, சிறுத்தை, காட்டெருமை போன்ற வன விலங்குகள் உள்ளன. குமரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் வனவிலங்குகள் பற்றிய கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். அதேபோல் 2020- 2021-ம் ஆண்டுக்கான வன உயிரின கணக்கெடுப்பு நேற்று தொடங்கியது. மாவட்ட வன அதிகாரியும், வன உயிரின காப்பாளருமான அசோக்குமார் உத்தரவின்பேரில் நடைபெறும் இந்த கணக்கெடுப்பு பணி நாளை (சனிக்கிழமை) வரை 3 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.
முதல் நாளான நேற்று காலை 6 மணிக்கு இந்த கணக்கெடுப்பு பணி தொடங்கியது. குமரி மாவட்டத்தில் பூதப்பாண்டி, அழகியபாண்டியபுரம், வேளிமலை, குலசேகரம், களியல் ஆகிய 5 வனச்சரகங்கள் உள்ளன.
110 பேர் பங்கேற்பு
உதவி வன பாதுகாவலர் சிவகுமார் தலைமையில் பூதப்பாண்டி வனச்சரகர் திலீபன் உள்ளிட்ட ஒரு குழுவினர் நேற்று தாடகமலை பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டனர். மேலும் பூதப்பாண்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட பணகுடி வனப்பகுதியில் 3 குழுக்களும், தெற்கு மலையில் 2 குழுக்களும், பொய்கை மலைப் பகுதியில் ஒரு குழுவும் என மொத்தம் 7 இடங்களில் இந்த கணக்கெடுப்பு பணி நடக்கிறது.
இதேபோல அழகியபாண்டியபுரம் வனச்சரகத்தில் 6 இடங்களிலும், குலசேகரத்தில் உள்ள வனச்சரகத்தில் 5 இடங்களிலும், வேளிமலை வனச்சரகத்தில் 5 இடங்களிலும், களியல் வனச்சரகத்தில் 3 இடங்களிலும் கணக்கெடுப்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். மொத்தம் 26 இடங்களில் 110 பேர் இந்த பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் 3 நாட்களும் வனப்பகுதிகளிலேயே தங்கியிருந்து கணக்கெடுப்பை நடத்துகிறார்கள். கணக்கெடுப்பு பணியில் வனத்துறையினரும், நாகர்கோவில் இந்துக்கல்லூரி, ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி மாணவ- மாணவிகள், ஊட்டியில் உள்ள வன உயிரியல் கல்லூரி மாணவ- மாணவிகள், தன்னார்வலர்கள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
சிறுத்தை- புலி கால்தடம்
முதல் நாள் நடந்த கணக்கெடுப்பின்போது  தாடகை மலையில் மிளாவை நேரடியாக பார்த்துள்ளனர். யானை மற்றும் கரடியின் எச்சங்கள் சேகரிக்கப்பட்டு கணக்கெடுக்கப்பட்டுள்ளன. பணகுடி வனப்பகுதியில் சிறுத்தைகளின் கால் தடங்களை கணக்கெடுப்பு குழுவினர் பார்த்து கணக்கெடுத்துள்ளனர். மேலும் புலியின் கால்தடமும் சேகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
3 நாள் கணக்கெடுப்பு முடிவில்தான் ஒவ்வொரு குழுவினரும் சேகரித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு, என்னென்ன மிருகங்கள் இருக்கின்றன? என்ற விவரம் கணக்கிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று 2-வது நாள் கணக்கெடுப்பு பணி நடைபெற இருக்கிறது.

Next Story