கொசுவுக்கு வைத்த நெருப்பால் 4 வீடுகளில் தீ விபத்து
கொசுவுக்கு வைத்த நெருப்பால் 4 வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பணம், நகைகள், பொருட்களும் எரிந்து நாசமானது.
நாகர்கோவில்,
கொசுவுக்கு வைத்த நெருப்பால் 4 வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பணம், நகைகள், பொருட்களும் எரிந்து நாசமானது.
திடீர் தீ விபத்து
நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி ரோடு அருகில் ஞானையா தெருவைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர் டேனியல். இவருக்கு சொந்தமாக 5 ஓட்டு வீடுகள் உள்ளன. ஒரே வரிசையில் உள்ள இந்த வீடுகளில் ஒரு வீட்டில் கிறிஸ்டோபர் டேனியல் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மற்ற 4 வீடுகளையும் அவர் வாடகைக்கு கொடுத்துள்ளார்.
வாடகைக்கு கொடுக்கப்பட்ட வீடுகளில் ஒரு வீட்டில் வசந்தகுமாரி என்ற பெண் வசித்து வருகிறார். இவர் வீட்டு வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் அப்பகுதியில் அளவுக்கதிகமான கொசுக்கள் இருந்ததால், அதை விரட்ட வசந்தகுமாரியின் வீட்டில் பழைய சாக்குப்பைகளை நெருப்பிட்டு கொளுத்தி மூட்டம் போடப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. அது அதிகாலை 3.45 மணி நெருப்பாக பற்றி எரிந்து அருகில் உள்ள பொருட்களில் பற்றி எரிந்தது.
ரூ.2 லட்சம் சேதம்
உடனே இதை பார்த்த வசந்தகுமாரியும், அவருடைய மகனும் அலறியடித்துக் கொண்டு வீட்டின் பின்புறக்கதவை திறந்து வெளியே வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் இந்த தீ வீட்டு உரிமையாளர் கிறிஸ்டோபர் டேனியல் வீடு உள்பட 3 வீடுகளுக்கும் பரவியது. உடனே இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின்பேரில் நாகர்கோவில் தீயணைப்பு நிலைய அதிகாரி துரை தலைமையில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மேலும் தீ பரவாமல் தடுத்து அணைத்தனர். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்குப்பிறகு தீ கட்டுக்குள் வந்தது. இதில் வசந்தகுமாரி வீடு உள்பட 4 வீடுகளில் உள்ள துணிமணிகள், பீரோ, கட்டில், மேஜை, துணிமணிகள், டி.வி., பிரிட்ஜ், ரொக்கப்பணம், நகைகள் மற்றும் பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இவற்றின் மதிப்பு ரூ.2 லட்சத்துக்கு மேல் இருக்கும் என தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.
காயம்
தீ பற்றி எரிந்ததும் வசந்தகுமாரி அணைக்க முயன்றுள்ளார். இதில் அவருடைய காலில் தீக்காயம் ஏற்பட்டது. இதனால் அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தீயணைப்பு படையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால் பெரும் அளவில் ஏற்பட இருந்த தீ விபத்து தடுக்கப்பட்டது.
சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. உதவி
தீ விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட 4 குடும்பத்துக்கும் அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார்.
இதேபோல் மறைந்த முன்னாள் எம்.பி. எச்.வசந்தகுமாரின் மகனும், காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளருமான விஜய் வசந்தும் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு அரசு தேவையான நிவாரண உதவிகளை செய்ய வேண்டும் என்று அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் கோரிக்கை விடுத்தார்.
Related Tags :
Next Story