பட்டாசு ஆலைகளில் சிறப்புக்குழுவினர் இன்று ஆய்வு
பட்டாசு ஆலைகளில் சிறப்புக்குழுவினர் இன்று ஆய்வு
சிவகாசி
பட்டாசு ஆலைகளில் சிறப்புக்குழுவினர் இன்று முதல் ஆய்வு செய்வார்கள் என கலெக்டர் கண்ணன் தெரிவித்தார்.
பட்டாசு விபத்து
சிவகாசி அருகே நடந்த பட்டாசு வெடி விபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட கலெக்டர் கண்ணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார். பின்னர் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து தலைமை டாக்டர் அய்யனாரிடம் கேட்டறிந்தார். பின்னர் நிருபர்களிடம் கலெக்டர் கண்ணன் கூறியதாவது:-
சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் தங்கராஜ் பாண்டி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. முதல்கட்ட விசாரணையில் நீர்த்துப்போன வெடிமருந்துகளால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது இந்த வெடி விபத்தில் உயிரிழந்த 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் ஒரு உடல் சம்பவ இடத்தில் இருப்பதாக தெரிகிறது.
இந்த விபத்தில் 19 பேர் காயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களில் 3 வெடி விபத்துகள் நடைபெற்றுள்ளது. முதல் வெடி விபத்தில் 23 நபர்களும், 2-வது வெடி விபத்தில் உயிர் சேதம் இல்லை. 3-வது வெடி விபத்தில் 5 பேரும் பலியாகி உள்ளனர். தற்போது வெயில் தாக்கம் அதிகமாக உள்ளதால் கவனமுடன் பணியாற்ற வேண்டும் என்று பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்குஅறிவுறுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்திலும் பட்டாசு ஆலை அதிபர்கள் பாதுகாப்பு வழிமுறைகள் கடுமையாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
ஆய்வு
இந்தநிலையில் இந்த விபத்து எதிர்பாராதவிதமாக வெடி விபத்து நடைபெற்றுள்ளது. விதிமுறைகளை பட்டாசு சாலைகள் கடைபிடிப்பது குறித்து ஆய்வு செய்ய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுக்கள் நாளை(அதாவது இன்று) முதல் அனைத்து பட்டாசு ஆலைகளுக்கும் சென்று ஆய்வு செய்து விதிகள் மீறி இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்.
பட்டாசு ஆலைகளில் தொழிலாளர்கள் நல்ல அனுபவமுள்ள தொழிலாளர்களை பணியில் அமர்த்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே நல்ல அனுபவமுள்ள போர்மேன் மட்டும் பணியில் இருப்பார்கள். இனி தொழிலாளர்களும் அனுபவம் வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும். வெடிவிபத்து நடந்த பட்டாசு ஆலையில் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்னும் 3 மணி நேரத்திற்கு மேலாக மீட்புபணி தொடரும். அதன் பின்னர் தான் பலி எண்ணிக்கையின் முழு விவரம் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story