விருதுநகர் மாவட்டத்தில் 35 சதவீத அரசு பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டன


விருதுநகர் மாவட்டத்தில் 35 சதவீத அரசு பஸ்கள்  மட்டும் இயக்கப்பட்டன
x
தினத்தந்தி 26 Feb 2021 1:50 AM IST (Updated: 26 Feb 2021 1:50 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நிலையில் மாவட்டம் முழுவதும் 35 சதவீத அரசு பஸ்கள் இயக்கப்பட்டதால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது

விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நிலையில் மாவட்டம் முழுவதும் 35 சதவீத அரசு பஸ்கள் இயக்கப்பட்டதால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. 
வேலை நிறுத்தம் 
அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் 14-வது ஊதிய ஒப்பந்தத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று விருதுநகர் மாவட்டத்திலும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் 355 அரசு பஸ்கள் இயக்கப்பட வேண்டிய நிலையில் 125 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது. அதாவது 35 சதவீத அரசு போக்குவரத்து கழக பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டன. இதனால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. மண்டல தலைமை போக்குவரத்து கழக பணிமனையான விருதுநகரில 73 பஸ்கள் இயக்கப்பட வேண்டிய நிலையில் நேற்று 20 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. 12 வெளியூர் பஸ்களும், 8 டவுன் பஸ்களும் இயக்கப்பட்டன.
 அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த போக்குவரத்து கழக ஊழியர்கள் பணிக்கு வந்த நிலையில் மற்ற தொழிற்சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் பிரச்சினையை ஏற்படுத்தியதால் அவர்களும் பஸ்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்பட்டது.
தவிப்பு 
நேற்று இயக்கப்பட்ட பஸ்களும் காலை 6 மணிக்கு மேல் தான் ஓடத் தொடங்கியதால் பஸ் நிலையங்களில் பயணிகள் பெருமளவில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதிலும் கிராமப்புறங்களில் இருந்து பள்ளிகளுக்கு வர வேண்டிய மாணவ-மாணவிகள் மற்றும் நகர்ப்புறங்களுக்கு வேலைக்கு வர வேண்டிய தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். மேலும் நேற்று முகூர்த்த தினம் ஆக இருந்ததால் திருமண நிகழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டியவர்கள் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது. மேலும் பஸ் நிலையங்களில் மினி பஸ்களும், தனியார் பஸ்களும் ஆக்கிரமித்திருந்த காட்சியை காண முடிந்தது. தனியார் பஸ்கள் குறிப்பிட்ட கால அட்டவணைப்படி இயக்கப்படாத நிலை இருந்தது. 
மேலும் தனியார் பஸ்களில் அதிக கூட்டம் முண்டியடித்து கொண்டு ஏறும் நிலை இருந்தது. ஆனாலும் பஸ் நிலையங்களில் போலீசார் பாதுகாப்புக்கு பணியமர்த்தப்பட நிலை இருந்தது. விருதுநகர்-மதுரை இடையே பயணிகள் ெரயிலும் இயக்கப்படாததால் பொதுமக்கள் மதுரை செல்வதற்கு பெரும் சிரமப்படும் நிலை இருந்தது. அதிலும் தென் மாவட்டங்களுக்கான இருவழி ெரயில் பாதையில் அமைப்புப் பணி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டதால் தென்மாவட்ட ரெயில்கள் அனைத்தும் மதுரை மற்றும் விருதுநகரில் நிறுத்தப்பட்டதால் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு வந்த பயணிகள் விருதுநகரில் இறங்கி தென் மாவட்டங்களுக்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லாமல் பஸ் நிலையத்தில் தவிக்கும் நிலை ஏற்பட்டது.

Next Story