போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்; 50 சதவீத பஸ்களே இயக்கப்பட்டன


போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்; 50 சதவீத பஸ்களே இயக்கப்பட்டன
x
தினத்தந்தி 26 Feb 2021 2:50 AM IST (Updated: 26 Feb 2021 2:50 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் போக்குவரத்து கழக தொழிலாளர் வேலை நிறுத்தத்தால் 50 சதவீத பஸ்களே இயக்கப்பட்டன.

அரியலூர்:

வேலை நிறுத்தம்
அரியலூரில் உள்ள அரசு போக்குவரத்து கழக கிளை பணிமனையில் இருந்து தினமும் 80 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் 14-வது ஊதிய ஒப்பந்தத்தை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக தொழிற்சங்கங்களை ேசர்ந்தவர்கள், நேற்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன. அண்ணா தொழிற்சங்க டிரைவர்கள், கண்டக்டர்கள் மட்டுமே பணிக்கு வந்துள்ளனர்.
இதனால் நேற்று அரியலூரில் உள்ள பணிமனையில் இருந்து 37 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. நேற்று முகூர்த்த தினம் என்பதால் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. அரசு பஸ்கள் 60 சதவீதம் இயங்காததால் தனியார் பஸ்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
பயணிகள் அவதி
இதேபோல் ஜெயங்கொண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மொத்தம் 86 பஸ்கள் உள்ளன. இதில் நேற்று 17 டவுன் பஸ்களும், 33 நகர பஸ்களும் என சுமார் 50 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இயக்கப்படாத பஸ்கள் பணிமனையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. பஸ் நிலையங்களில் இருந்து இயக்கப்பட்ட தனியார் மற்றும் அரசு பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால், பலர் நின்றபடி பயணம் செய்தனர். இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.
நேற்று காலை பணிக்கு வந்து டிரைவர்கள், கண்டக்டர்கள், தற்காலிகமாக பணிபுரிபவர்களை கொண்டு 50 சதவீத பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டதாக, ஜெயங்கொண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனை மேலாளர் குணசேகரன் தெரிவித்தார். ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ் உத்தரவின்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார், போக்குவரத்து கழக பணிமனை முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story