கார் கவிழ்ந்து மின்வாரிய ஊழியர் பலி


கார் கவிழ்ந்து மின்வாரிய ஊழியர் பலி
x
தினத்தந்தி 26 Feb 2021 3:36 AM IST (Updated: 26 Feb 2021 3:36 AM IST)
t-max-icont-min-icon

மகனுக்கு பணி நியமன ஆணை பெற சென்னைக்கு சென்ற போது திருச்சி அருகே கார் கவிழ்ந்து மின்வாரிய ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருச்சி அருகே பரிதாபம்:
கார் கவிழ்ந்து மின்வாரிய ஊழியர் பலி
மகனுக்கு பணிநியமன ஆணை பெற சென்னைக்கு சென்ற போது விபத்து
மணிகண்டம், பிப்.26-
மகனுக்கு பணி நியமன ஆணை பெற சென்னைக்கு சென்ற போது திருச்சி அருகே கார் கவிழ்ந்து மின்வாரிய ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

மின்வாரிய ஊழியர்

நெல்லை மாவட்டம் நான்குநேரி அருகே கீரன்குளத்தை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 55). இவர் அப்பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வயர்மேனாக பணியாற்றி வந்தார். இவரது மகன் அய்யப்பனுக்கு (25) மின்வாரியத்தில் கேங்மேன் பணி சமீபத்தில் கிடைத்தது. அதற்கான பணி நியமன ஆணையை நேற்று சென்னையில் வந்து பெற்றுக்கொள்ளுமாறு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இருந்து தபால் அனுப்பப்பட்டிருந்தது.

இதையடுத்து பால்ராஜ் தனது மகன் அய்யப்பன் மற்றும் அவரது உறவினர்கள் 3 பேர் கீரன்குளத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை ஒரு காரில் புறப்பட்டு சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தனர். காரை தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சாமுவேல் (21) ஓட்டினார். 

கார் கவிழ்ந்து பலி

திருச்சி மாவட்டம் அளுந்தூர் அருகே நேற்று அதிகாலை 2 மணியளவில் கார் வந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரை பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பால்ராஜ் படுகாயம் அடைந்தார். மற்றவர்கள் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.

அங்கிருந்தவர்கள் பால்ராஜை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மணிகண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story