திம்பம் மலைப்பாதையில் அடுத்தடுத்து 2 லாரிகள் பழுதாகி நின்றன; 7 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


திம்பம் மலைப்பாதையில் அடுத்தடுத்து 2 லாரிகள் பழுதாகி நின்றன; 7 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 26 Feb 2021 3:38 AM IST (Updated: 26 Feb 2021 3:38 AM IST)
t-max-icont-min-icon

திம்பம் மலைப்பாதையில் அடுத்தடுத்து 2 லாரிகள் பழுதாகி நின்றதால் 7 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தாளவாடி
திம்பம் மலைப்பாதையில் அடுத்தடுத்து 2 லாரிகள் பழுதாகி நின்றதால் 7 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திம்பம் மலைப்பாதை
ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப்பாதை வழியாக தமிழகத்தில் இருந்து கர்நாடகத்துக்கும், அதேபோல் அங்கிருந்து தமிழகத்துக்கும் தினமும் கார், பஸ், லாரி, வேன், இருசக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் போன்ற ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
தமிழகம்-கர்நாடகம் இடையே முக்கிய போக்குவரத்தாக இந்த பாதை உள்ளது. குறுகிய வளைவுகளை கொண்டதால் அதிக பாரம் ஏற்றி இந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி நடுரோட்டில் பழுதாகி நின்று விடுகிறது. சில நேரம் கவிழ்ந்து விடுகிறது. இதனால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
லாரி பழுது
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து சேலத்துக்கு மர பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி திம்பம் மலைப்பாதை 9-வது கொண்டை ஊசி வளைவில் காலை 7 மணி அளவில் திரும்பும்போது பழுதாகி நின்றது. இதனால் அந்த வழியாக சிறிய வாகனங்கள் மட்டும் சென்று வந்தன. மற்ற வாகனங்கள் ஏதும் செல்ல முடியவில்லை.
இதைத்தொடர்ந்து ஆசனூர் போலீசார் அங்கு சென்று போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் பண்ணாரியில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு லாரியை அப்புறப்படுத்தும் பணி நடந்தது. பகல் 11 மணி அளவில் லாரி அப்புறப்படுத்தப்பட்டது. அதன்பின்னரே போக்குவரத்து சீரானது. அனைத்து வாகனங்களும் சென்றன. திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றதால் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
மீண்டும் சம்பவம்
இதேபோல் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கோவைக்கு காப்பிதூள் வேஸ்ட் பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. திம்பம் மலைப்பாதை 26-வது கொண்டை ஊசி வளைவில் பிற்பகல் 3 மணி அளவில் சென்றபோது வளைவில் திரும்ப முடியாமல் நின்றது.
இதைத்தொடர்ந்து பண்ணாரியில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு 6 மணி அளவில் லாரி அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் திம்பம் மலைப்பாதையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காலையில் 4 மணி நேரமும், மாலையில் 3 மணி நேரமும் என திம்பம் மலைப்பாதையில் தொடர்ந்து நேற்று 7 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாயினர்.

Next Story