வேலை நிறுத்த போராட்டம்: ஈரோட்டில் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை- பெரும்பாலான பஸ்கள் ஓடின


வேலை நிறுத்த போராட்டம்: ஈரோட்டில் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை- பெரும்பாலான பஸ்கள் ஓடின
x
தினத்தந்தி 26 Feb 2021 3:38 AM IST (Updated: 26 Feb 2021 3:38 AM IST)
t-max-icont-min-icon

அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் ஈரோட்டில் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை. பெரும்பாலான பஸ்கள் ஓடின.

ஈரோடு
அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் ஈரோட்டில் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை. பெரும்பாலான பஸ்கள் ஓடின.
வேலை நிறுத்தம்
தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் 14-வது ஊதிய ஒப்பந்தத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்தது.
அதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. நேற்று அதிகாலையில் இருந்தே பஸ்கள் ஓடுமா? ஓடாதா? என்ற சந்தேகத்தில் ஈரோடு பஸ் நிலையத்துக்கு பயணிகள் வந்தனர். வழக்கம்போல அரசு பஸ்கள் பஸ் நிலையத்துக்கு வந்து பயணிகளை ஏற்றிச்சென்றன.
நெரிசல்
ஆனால், நேற்று வேலை நிறுத்த அறிவிப்பு காரணமாக பயணிகள் வருகை குறைவாக இருந்தது. வழக்கமான கூட்டம் இல்லாததால் பஸ் நிலையம் பகல் நேரங்களில் வெறிச்சோடி கிடந்தது. நகர் பகுதியில் உள்ள பல பஸ் நிறுத்தங்களில் வழக்கமாக காத்திருக்கும் பயணிகளும் தனியார் பஸ் அல்லது வீடுகளில் இருந்தே மோட்டார் சைக்கிள்களில் தங்கள் பயணத்தை மேற்கொண்டனர். பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் பல பஸ்கள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டன. அதே நேரம் டவுன் பஸ்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் அளவுக்கு அதிகமாக கூட்ட நெரிசல் இருந்தது. தனியார் பஸ்கள் நேற்று குறிப்பிட்ட நேரம் என்று இல்லாமல் இயக்கினார்கள். மினி பஸ்கள், ஷேர் ஆட்டோக்களும் வழக்கம்போல ஓடின.
ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் இயக்கப்படாத பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. அரசு பஸ்களை பொறுத்தவரை சுமார் 70 சதவீதம் இயக்கப்பட்டன. தனியார் பஸ்கள், மினி பஸ்கள் உள்ளிட்ட அனைத்து வகை போக்குவரத்து வாகனங்களும் இயங்கியதால் ஈரோட்டில் இயல்பு நிலையில் பாதிப்பு ஏற்படவில்லை. சாலைகள் அனைத்தும் வழக்கமான போக்குவரத்து நெரிசலுடனே இருந்தன.
சத்தியமங்கலம்- கொடுமுடி
சத்தியமங்கலத்தில் போக்குவரத்து ஊழியர்கள் அதிக அளவில் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டார்கள். சத்தியமங்கலம் கிளையில் 90 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் 27 பஸ்கள் மட்டுமே நேற்று இயங்கின. மற்ற பஸ்கள் இயங்கவில்லை. தனியார் பஸ்கள், கர்நாடகா செல்லும் பஸ்கள் வழக்கம்போல் சென்று வருகின்றன.
கொடுமுடி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் உள்ள அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டன கிளை மேலாளர் ரமேஷ் தெரிவித்தார். ஆனால் வெளியூர்களில் இருந்து வழக்கம்போல் பஸ்கள் பெருமளவில் ஓடவில்லை. இதனால் பொதுமக்கள் மற்றும் அலுவலகம் செல்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தனியார் பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. 

Next Story