தாலுகா அலுவலகம் முன்பு வருவாய்த்துறை அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்
ஈரோடு தாலுகா அலுவலகம் முன்பு வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு
ஈரோடு தாலுகா அலுவலகம் முன்பு வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கைகள்
தமிழகம் முழுவதும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். வருவாய்த்துறையில் கருணை அடிப்படை பணி நியமனங்களை உடனடியாக வரன்முறை செய்ய வேண்டும்.
அலுவலக உதவியாளர், பதிவுரு எழுத்தர், டிரைவர், இரவு காவலர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பட்டதாரி அல்லாதவர்களின் பதவி உயர்வினை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 17-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
ஆர்ப்பாட்டம்
ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள தாசில்தார்கள், துறை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், அலுவலக உதவியாளர்கள் என அனைத்து பிரிவினரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். 9-வது நாளாக நேற்று ஈரோடு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் அ.பரிமளாதேவி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் குருராகவேந்திரன், பொருளாளர் விஜயகுமார் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஈரோடு, பெருந்துறை, மொடக்குறிச்சி, கொடுமுடி ஆகிய தாலுகா தாசில்தார்கள் முதல் தோட்டப்பணியாளர்கள் வரை இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
இதுபற்றி வருவாய்த்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘நாங்கள் 10 கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி இருக்கிறோம். இந்த போராட்டம் என்பது ஒட்டு மொத்த தமிழக மக்களின் நலன் சார்ந்த கோரிக்கைகளுக்காகவே நடக்கிறது. எனவே அரசு எங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றித்தர வேண்டும். எங்கள் போராட்டத்தால் 9 நாட்கள் வருவாய்த்துறையில் அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டு இருக்கின்றன. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் கால வரையறை இன்றி அனைத்து பணிகளையும் இரவு பகல் பாராமல் முடித்துக்கொடுக்க தயாராக இருக்கிறோம். எங்கள் போராட்டத்துக்கு பொதுமக்களும் ஆதரவு அளிக்க வேண்டும்’ என்றார்கள்.
Related Tags :
Next Story