போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்: பஸ்கள் வழக்கம்போல் ஓடின பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பில்லை
சேலம் மாவட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் நடைபெற்றது. ஆனால் வழக்கம்போல் பஸ்கள் ஓடின. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் நடைபெற்றது. ஆனால் வழக்கம்போல் பஸ்கள் ஓடின. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.
வேலைநிறுத்தம்
ஊதிய உயர்வு, ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு உடனடியாக பணப்பயன்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, சேலம் மாவட்டத்தில் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., எச்.எம்.எஸ். உள்ளிட்ட சில தொழிற்சங்கங்களை சேர்ந்த போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலைக்கு வரவில்லை. மற்றபடி தொழிலாளர்கள் வழக்கம்போல் வேலைக்கு வந்திருந்தனர். அந்தந்த பணிமனைகளில் இருந்து பஸ்கள் சென்றன. ஒருசில பணிமனைகளில் மட்டும் பஸ்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அதேசமயம், வேலை நிறுத்தத்தில் ஊழியர்கள் பங்கேற்க கூடாது என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் எச்சரிக்கை செய்திருந்தனர். இதனால் பணிமனைகளுக்கு அதிகாரிகள் காலையில் சென்று பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்படுவதை உறுதிப்படுத்தினர்.
80 சதவீதம் பஸ்கள்
சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் 80 சதவீதம் பஸ்கள் இயக்கப்பட்டன. சேலம் மாநகரில் டவுன் பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் அனைத்தும் இயக்கப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.
சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 1,600 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம், ஒருசில தொழிற்சங்க ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக நேற்று சேலத்தில் இருந்து கோவை, மதுரை, திருச்சி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு குறைவான பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன.
பாதிப்பு இல்லை
சேலம், ஆத்தூர், மேட்டூர், வாழப்பாடி, ஓமலூர், எடப்பாடி ஆகிய போக்குவரத்து கழக பணிமனைகளில் இருந்து நேற்று காலை 70 சதவீத பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன. அதிலும், பஸ்களில் குறைவான பயணிகள் இருந்தனர். அதேசமயம், கிராமப்புறங்களுக்கு வழக்கம்போல் டவுன் பஸ்கள் அனைத்தும் இயக்கப்பட்டதால் புறநகர் பகுதியில் பஸ் போக்குவரத்து பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.
இதுகுறித்து சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறுகையில், தொழிற்சங்க தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் சேலம் மாவட்டத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன. பணிக்கு வராத பஸ் தொழிலாளர்களின் பட்டியல் தயாரித்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிசீலனை செய்யப்படும், என்றனர்.
ஆத்தூர்
ஆத்தூரில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் இருந்து 71 பஸ்கள் சேலம், ராசிபுரம், கள்ளக்குறிச்சி, சென்னை போன்ற பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்தது. நேற்று காலை முதல் பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். இதனால் தனியார் பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
மாலைக்கு பிறகு 71 பஸ்களில் 60 பஸ்கள் இயக்கப்பட்டதாக அரசு போக்குவரத்து கழக அலுவலர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story