மாநில விருது பெற்ற மாணவிக்கு பாராட்டு விழா
பெண் குழந்தைகள் முன்னேற்றத்திற்கான மாநில விருது மாணவிக்கு ஊத்துக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.
ஊத்துக்கோட்டை,
திருவள்ளூர் மாவட்டம் வேலகாபுரம் கிராமம் மேட்டு காலனியை சேர்ந்தவர் தேவன். தோட்டத்தொழிலாளி. இவருடைய மகள் நர்மதா. ஊத்துக்கோட்டையில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். சமூக பணியில் அக்கறை கொண்ட இவர் படிப்பை பாதியிலேயே நிறுத்தும் மாணவர்களை சந்தித்து படிப்பை தொடரவும் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும் பாடுபட்டார். மேலும் குழந்தை திருமணத்தை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொண்டார்.
இதை பாராட்டும் வகையில் கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த பெண் குழந்தைகள் பாதுகாப்பு மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். இதனிடையே மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளையொட்டி நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாணவி நர்மதாவுக்கு பெண் குழந்தைகள் முன்னேற்றத்திற்கான மாநில விருது-2021 வழங்கினார். அத்துடன் ரூ.1 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது. இதையொட்டி மாணவி நர்மதாவுக்கு ஊத்துக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் சுதாகர் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஷேக் தாவூத் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பள்ளி ஆசிரியைகள் சார்பாக மாணவிக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்கினார். நிகழ்ச்சியில் மாணவி நர்மதாவின் தாய் கோகிலா, பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சின்னமணி, புலவர் நடராஜன், பாபா, பெருமாள், நடராஜன், தங்ககுமார், அப்பாஸ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story