தாம்பரம் சானடோரியம் அருகே, மின்சார ரெயில்கள் செல்லும் உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்தது - 7 மணிநேரம் எக்ஸ்பிரஸ் ரெயில் பாதையில் இயக்கப்பட்டன


தாம்பரம் சானடோரியம் அருகே, மின்சார ரெயில்கள் செல்லும் உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்தது - 7 மணிநேரம் எக்ஸ்பிரஸ் ரெயில் பாதையில் இயக்கப்பட்டன
x
தினத்தந்தி 26 Feb 2021 4:22 AM GMT (Updated: 26 Feb 2021 4:22 AM GMT)

தாம்பரம் சானடோரியம் அருகே தாம்பரம்-சென்னை கடற்கரை வழித்தடத்தில் மின்சார ரெயில்கள் செல்லும் உயர்அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் 7 மணிநேரம் எக்ஸ்பிரஸ் ரெயில் வழித்தடத்தில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன.

தாம்பரம்,

சென்னையை அடுத்த தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை 5.35 மணிக்கு மின்சார ரெயில் ஒன்று சென்னை கடற்கரைக்கு புறப்பட்டு சென்றது. தாம்பரம் சானடோரியம் ரெயில் நிலையம் அருகே சென்றபோது, திடீரென அந்த வழித்தடத்தில் உள்ள உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்தது.

இதனால் அந்த மின்சார ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் ரெயில்வே பணிமனை என்ஜினீயர்கள் குழுவினர் விரைந்து வந்து, அறுந்து விழுந்த மின்வயரை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இதனால் தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே சிறிதுநேரம் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. அதன்பின்னால் தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வந்த மின்சார ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது.

இதையடுத்து அந்த வழித்தடத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, சுமார் 20 ஊழியர்கள் அறுந்து விழுந்த மின் வயரை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று காலை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் 50 சதவீத பஸ்களே இயங்கின. அலுவலக நேரத்தில் பஸ்சில் செல்ல முடியாதவர்கள், மின்சார ரெயில்களில் பயணம் செய்தனர். இதனால் அதிகாலை நேரத்தில் தாம்பரம் ரெயில் நிலையத்தில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. மின்சார ரெயில்களில் பயணிகள் நிரம்பி வழிந்தனர்.

இதனால் பயணிகள் வசதிக் காக தாம்பரம்-கடற்கரை மார்க்கமாக செல்லும் மின்சார ரெயில்கள் எக்ஸ்பிரஸ் ரெயில் பாதையில் இயக்கப்பட்டன. தாம்பரம் ரெயில் நிலையத்தில் உள்ள 5,6,7,8, ஆகிய நடைமேடையில் இருந்து மின்சார ரெயில்கள் சென்னை கடற்கரைக்கு புறப்பட்டு சென்றன.

அந்த ரெயில்கள் குரோம்பேட்டை ரெயில் நிலையம் வரை எக்ஸ்பிரஸ் ரெயில் பாதையில் மெதுவாக இயக்கப்பட்டன. அதன்பிறகு குரோம்பேட்டையில் இருந்து வழக்கமான பாதையில் திருப்பி விடப்பட்டன.

அறுந்து விழுந்த மின்வயரை மதியம் 12.30 மணியளவில் சீரமைத்தனர். இதனால் 7 மணிநேரமாக எக்ஸ்பிரஸ் ரெயில் பாதையில் இயக்கப்பட்ட மின்சார ரெயில்கள் அதன்பிறகு தாம்பரத்தில் இருந்து வழக்கமான பாதையில் சென்னை கடற்கரைக்கு இயக்கப்பட்டன.

அதேநேரத்தில சென்னை கடற்கரை-தாம்பரம் மார்க்க மின்சார ரெயில் சேவையில் எந்தவித பாதிப்பும் இன்றி வழக்கம்போல் இயக்கப்பட்டன.

Next Story