பெட்ரோல், டீசல் கியாஸ் சிலிண்டர் விலையேற்றத்தை கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு அழுத்தம் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி


பெட்ரோல், டீசல் கியாஸ் சிலிண்டர் விலையேற்றத்தை கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு அழுத்தம் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 26 Feb 2021 10:54 AM IST (Updated: 26 Feb 2021 10:54 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையேற்றத்தை கட்டுப்படுத்தி குறைப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

திருவொற்றியூர், 

சென்னை ராயபுரத்தில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு ஆஸ்பத்திரியில், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளன்று பிறந்த 14 பெண் குழந்தைகள் மற்றும் 13 ஆண் குழந்தைகள் என மொத்தம் 27 குழந்தைகளுக்கு அமைச்சர் ஜெயக்குமார் நேற்று தங்க மோதிரம் அணிவித்து, அக்குழந்தைகளின் தாய்மார்களுக்கு பரிசு பொருட்களை வழங்கினார்.

இதில் ஆர்.எஸ்.ஆர்.எம். ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் சுப்புலட்சுமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

அ.தி.மு.க. அரசின் அசாத்தியமான சாதனைகளையும், வரவேற்பு மிக்க திட்டங்களையும் பொறுத்துக்கொள்ள முடியாமல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். அ.தி.மு.க. ஆட்சியில் தி.மு.க.வினரை தவிர மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

சசிகலா மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கும், அ.தி.மு.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை என ஏற்கனவே தீர்மானம் போடப்பட்ட நிலையில் இனி யார் என்ன சொன்னாலும் அதில் உடன்பாடு ஏற்படாது. அ.தி.மு.க. ஏற்கனவே எடுத்த நிலைபாட்டில்தான் இறுதி வரை இருக்கும்.

மக்களுக்கு அ.தி.மு.க. மீது உள்ள நம்பகத்தன்மையை யாராலும் அழிக்க முடியாது. எங்கள் கூட்டணியை பொறுத்தவரை எந்த குளறுபடியும் இல்லை. அ.தி.மு.க. கூட்டணியில் மேலும் கட்சிகள் இணையுமே தவிர, கூட்டணியில் இருந்து எந்த கட்சியும் வெளியேறாது.

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையேற்றத்தை கட்டுப்படுத்தி குறைப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story