புதுவண்ணாரப்பேட்டையில் வங்கியில் திடீர் தீ விபத்து - வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் அலறி அடித்து ஓட்டம்


புதுவண்ணாரப்பேட்டையில் வங்கியில் திடீர் தீ விபத்து - வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் அலறி அடித்து ஓட்டம்
x
தினத்தந்தி 26 Feb 2021 11:10 AM IST (Updated: 26 Feb 2021 11:10 AM IST)
t-max-icont-min-icon

புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

திருவொற்றியூர்,

சென்னை புதுவண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தனியார் வங்கி உள்ளது. நேற்று காலை வழக்கம்போல் வங்கி திறக்கப்பட்டு ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். வங்கியில் வாடிக்கையாளர்களும் இருந்தனர்.

அப்போது வங்கியில் உள்ள சேமிப்பு அறையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அந்த அறையில் இருந்த பதிவேடுகள், பொருள்கள் எரிய ஆரம்பித்தன. திடீரென கரும்புகை வெளியேறியதால் வங்கியில் உள்ள எச்சரிக்கை அலாரம் அடிக்கத் தொடங்கியது.

இதனால் பயந்து போன வங்கி ஊழியர்களும், அங்கிருந்த வாடிக்கையாளர்களும் அலறி அடித்துக் கொண்டு வங்கியில் இருந்து வெளியே ஓடிவந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த, 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் அந்த அறையில் இருந்த பதிவேடுகள், பொருட்கள் தீயில் எரிந்து நாசமானதாக தெரிகிறது.

இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story