செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு: மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்


செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு: மண்டல அலுவலகத்தில்  பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 26 Feb 2021 4:20 PM IST (Updated: 26 Feb 2021 4:20 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் தண்ணீர்பந்தல் காலனியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள்.

அனுப்பர்பாளையம்
திருப்பூர் தண்ணீர்பந்தல் காலனியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள்.
இதுபற்றி கூறப்படுவதாவது:-
செல்போன் கோபுரம்
திருப்பூர் மாநகராட்சி 1-வது வார்டுக்குட்பட்ட தண்ணீர்பந்தல் காலனியை அடுத்த வீரப்பசெட்டியார் நகர் பகுதியில் தனியார் ஒருவரின் வீட்டு மாடியில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அந்த பகுதியில் கோபுரம் அமைத்தால் அப்பகுதி மக்களின் உடல்நலத்திற்கு பாதிப்பு ஏற்படுவதுடன் செல்போன் கோபுரம் அமைக்கப்படும் இடத்திற்கு அருகில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் தனியார் பள்ளி இருப்பதால் மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே அங்கு செல்போன் கோபுரம் அமைக்கக்கூடாது என்று ஊர் பொதுமக்கள் சார்பில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு வழங்கப்பட்டது.
காத்திருப்பு போராட்டம்
 ஆனால் தொடர்ந்து அந்த பகுதியில் பணிகள் நடைபெற்று வருவதால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் கவுன்சிலர் செல்வராஜ் தலைமையில் நேற்று காலை அனுப்பர்பாளையத்தில் உள்ள 1-வது மண்டல அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் அலுவலக வளாகத்தில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் செல்போன் கோபுரம் அமைப்பது தொடர்பான அனுமதியை மாநகராட்சி நிர்வாகம் வழங்க முடியாது என்று தெரிவித்தனர். இதையடுத்து அங்கு தற்காலிகமாக பணி நிறுத்தப்பட்டது. இதன் பின்பு போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். ஆனால் செல்போன் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றால் சம்பந்தப்பட்ட வீட்டு முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.


Next Story