6 ஆயிரம் சலூன் கடைகள் அடைப்பு
5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி தேனி மாவட்டத்தில் 6 ஆயிரம் சலூன் கடைகளை அடைத்து, முடி திருத்தும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தேனி:
மருத்துவ சமுதாய மக்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்க வேண்டும்,
பி.சி.ஆர். சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சலூன் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி தேனி மாவட்டத்தில் சுமார் 6 ஆயிரம் சலூன் கடைகள் நேற்று அடைக்கப்பட்டன.
மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் தேனி பங்களாமேட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதற்கு மாநில பொதுச்செயலாளர் ராஜன் தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி அமைப்பாளர் ராமதாஸ், மாவட்ட தலைவர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோஷங்கள்
இதில் மாவட்ட செயலாளர் காந்தி, மாவட்ட பொருளாளர் திருமலைராஜ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் நாகரத்தினம், தேனி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து முடி திருத்தும் தொழிலாளர்கள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
முடிவில் தேனி நகர தலைவர் விஜயகுமார் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story