குடவாசல் கோணேஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம்பிடித்தனர்


குடவாசல் கோணேஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம்பிடித்தனர்
x
தினத்தந்தி 26 Feb 2021 3:00 PM GMT (Updated: 26 Feb 2021 3:00 PM GMT)

குடவாசல் கோணேஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

குடவாசல், 

திருவாரூர் மாவட்டம் குடவாசலில் கோணேஸ்வரர் கோவில் உள்ளது. அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரால் பாடல் பெற்ற தலம். கும்பகோணத்தில் நடைபெறும் மகாமக திருவிழாவுக்கும், குடவாசலுக்கும் பல்வேறு ஒற்றுமைகள் உள்ளன.

தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் திருப்பாற்கடலில் அமுதம் கடையும் நிகழ்வு நடந்தது. அப்போது அமுதம் நிரம்பிய குடத்தை எடுத்து வரும்போது அது கும்கோணம் மகாமக குளத்தில் விழுந்ததாகவும், அந்த குடத்தின் வாய்ப்பகுதி குடவாசல் திருக்குளத்தில் விழுந்ததாகவும் தலபுராணம் கூறுகிறது.

தேரோட்டம்

குடத்தின் வாய் பகுதி விழுந்த இடமே குடவாசல் என்றானதாவும், அங்கு உள்ள திருக்குளம் அமுத தீர்த்தம் என்றும் கருதப்படுகிறது. இவ்வாறு பல்வேறு சிறப்புகளை பெற்ற புண்ணிய தலமான குடவாசலில் உள்ள கோணேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மக திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் காலை 10 மணியளவில் பெரியநாயகி அம்மன், கோணேஸ்வரருடன் தேரில் எழுந்தருளி அருள்பாலித்தார். இதையடுத்து திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். விழாவில் இன்று (வெள்ளிக்கிழமை) கோவில் எதிரே உள்ள அமுத தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவில்

நன்னிலம் அருகே திருவாஞ்சியத்தில் மங்களாம்பிகை சமேத வாஞ்சிநாதர் கோவில் உள்ளது. இங்கு எமனுக்கு தனி சன்னதி உள்ளது சிறப்பம்சம் ஆகும். இக்கோவிலில் மாசிமக பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி வாஞ்சிநாதர், மங்களாம்பிகை, விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் தேரில் எழுந்தருளினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் பல்வேறு வீதிகள் வழியாக வலம் வந்து, நிலையை அடைந்தது. 

Next Story