சிதம்பரம் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம்
நடப்பாண்டிலேயே கல்வி கட்டணத்தை குறைக்கக்கோரி ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மாணவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்ணாமலைநகா்:
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் பிற அரசு மருத்துவக்கல்லூரிகளில் பெறப்படும் கல்வி கட்டணத்தை பெற வலியுறுத்தி மாணவ-மாணவிகள் 59 நாட்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து உயர்கல்வித்துறையின் கீழ் இயங்கி வந்த ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியை சுகாதாரத் துறையின் கீழ் கொண்டு வந்து கல்வி கட்டணத்தை குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதனையடுத்து மாணவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
தொடர் போராட்டம்
இந்நிலையில் இந்த குறைக்கப்பட்ட கல்வி கட்டணம் அடுத்த கல்வி ஆண்டில் தான் அமலுக்கு வரும் என்றும் நடப்பு கல்வியாண்டில் மாணவர்கள் பழைய கல்விக்கட்டணத்தையே கட்ட வேண்டும் என மருத்துவக் கல்லூரி நிர்வாகம் வலியுறுத்தியதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மருத்துவக்கல்லூரி மாணவர்கள், பயிற்சி டாக்டர்கள் நேற்று மாலை ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடப்பு கல்வி ஆண்டிலேயே குறைக்கப்பட்ட கல்வி கட்டணத்தை பெறக்கோரி கோஷம் எழுப்பி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story