கார்களில் கட்டுக்கட்டாக பணம் பரிமாற்றம்
தேர்தல் அறிவிப்பு தகவல் பரவியதன் எதிரொலியாக தேர்தல் கட்டுப்பாடுகளை கருத்தில்கொண்டு நேற்று காலை முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் கட்டுக்கட்டாக கார்களிலும் வேன்களிலும் பணம் பரிமாறப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம்,
தேர்தல் அறிவிப்பு தகவல் பரவியதன் எதிரொலியாக தேர்தல் கட்டுப்பாடுகளை கருத்தில்கொண்டு நேற்று காலை முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் கட்டுக்கட்டாக கார்களிலும் வேன்களிலும் பணம் பரிமாறப்பட்டு உள்ளது.
உஷார்
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை தொடர்ந்து தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவிக்க உள்ளதாக நேற்று காலை தகவல் பரவியது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நடைமுறை விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரும் என்பதால் அனைவரும் உஷார் அடைந்தனர். குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று காலை முதல் பரபரப்பாக காணப்பட்டது. ஏராளமான கார்களிலும், வேன்களிலும் கட்டுக்கட்டாக பணம் வைக்கப்பட்டு உரிய இடங்களில் கொண்டு போய் சேர்க்கும் பணி நடைபெற்றதாக பரபரப்ப தகவல் வெளியாகி உள்ளது.
ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து உள்ளுர் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு அரசியல் ரீதியாகவும், தொழில் ரீதியாகவும், குடும்ப தேவைக்காகவும் இந்த பணம் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்டது. குறிப்பாக அரசியல் காரணத்திற்காகவும், தேர்தல் காரணத்திற்காகவும், தொழில்ரீதியாகவும் இந்த பணம் அதிகஅளவில் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
பரபரப்பு
காலை முதலே கார்களில் முக்கிய பிரமுகர்களுக்கும், அரசியல் தொடர்பாளர்களுக்கும் இந்த பணம் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது என்ற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ராமநாதபுரம் நகர் மட்டுமல்லாது அனைத்து பகுதிகளிலும் கார்களின் ஓட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. ஏனெனில் இதன்பின்னர் கொண்டுசென்றால் அதற்கு கணக்கு காட்டவேண்டும், வழக்கு வட்டத்திற்குள் வரவேண்டும் என்பது போன்ற தேர்தல் விதிமுறை சிக்கல்கள் இருப்பதால் உடனடியாக இருப்பதை கைமாற்றி பெறவேண்டியதை பெற்று கொடுக்க வேண்டியதை கொடுத்து நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டனர்.
புலம்பல்
மார்ச் முதல்வாரத்தில்தான் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்று சர்வசாதாரணமாக இருந்த நிலையில் திடீரென்று தேர்தல் அறிவிப்பு வரஉள்ளதாக தகவல் வெளியானதால் 40 சதவீத அளவில் மட்டுமே பணத்தினை கொண்டு சேர்க்க முடிந்ததாக சம்பந்தப்பட்டவர்கள் புலம்பினார்களாம். இருப்பினும் மீதம் உள்ள பணத்தினை எவ்வாறு கொண்டு சேர்ப்பது என்ற கவலையில் சிலர் ஆழ்ந்துள்ளனர். பகலில் நடைபெற்ற இந்த பரபரப்பு சம்பவத்தில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் கைமாறி உள்ளதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story