தொழிலாளி கொலை வழக்கில் மனைவி, மாமியார் உள்பட 4 பேர் கைது
ஆண்டிப்பட்டி அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் மனைவி, மாமியார் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள பாலக்கோம்பை கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளத்துரை (வயது40). கூலித்தொழிலாளி.
இவரது மனைவி வள்ளி. வெள்ளத்துரை கடந்த 24-ந்தேதி பாலக்கோம்பை கிராமத்தில் இருந்து ராயவேலூர் கிராமத்திற்கு செல்லும் வழியில் சுடுகாட்டுப் பகுதியில் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இது குறித்து ராஜதானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.
இதில் வெள்ளத்துரையை, அவரது மைத்துனர்கள் ராயவேலூரை சேர்ந்த சண்முகவேல் (33), தெய்வேந்திரன் (39), மாமியார் தங்கம்மாள் (50), மனைவி வள்ளி (35) ஆகிய 4 பேரும் சேர்ந்து திட்டம் போட்டு கொலை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்கள் 4 பேரையும் ராஜதானி போலீசார் கைது செய்தனர்.
வாக்குமூலம்
அவர்கள் கொடுத்துள்ள பரபரப்பு வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-
வெள்ளத்துரை மதுகுடித்து விட்டு வந்து வள்ளியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து அடிக்கடி தகராறு செய்தார்.
சம்பவத்தன்று அவர் மைத்துனர்கள் முன் மனைவியிடம் சண்டை போட்டுள்ளார். இதனை மைத்துனர்கள் தட்டிக்கேட்டனர். அப்போது அவர்களிடம் வெள்ளத்துரை தகராறு செய்தார்.
இதனையடுத்து அடிக்கடி சண்டை போடும் வெள்ளத்துரையை தீர்த்துக்கட்ட மைத்துனர்கள், மனைவி மற்றும் மாமியார் திட்டம் போட்டனர்.
இதையடுத்து வெள்ளத்துரையை கடந்த 23-ந்தேதி மைத்துனர்கள் சண்முகவேல், தெய்வேந்திரன் ஆகியோர் சுடுகாட்டு பகுதிக்கு அழைத்து சென்று அங்கு மதுகுடித்தனர்.
பின்னர் அங்கு கிடந்த கட்டையால் வெள்ளத்துரையை தாக்கி உள்ளனர். இதில் வெள்ளத்துரை சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.
இவ்வாறு போலீசார் கூறினர். இந்த சம்பவம் ராஜதானி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story