ராமேசுவரத்தில் மீனவர்கள் நூதன போராட்டம்
ராமேசுவரத்தில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கும் படகுகள் மீது நடவடிக்கை எடுக்காத மீன்துறை அதிகாரிகளை கண்டித்து மீனவர்கள் நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.
ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கும் படகுகள் மீது நடவடிக்கை எடுக்காத மீன்துறை அதிகாரிகளை கண்டித்து மீனவர்கள் நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.
மீன்வளத்துறை
ராமேசுவரத்தில் நேற்று கடல் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பஸ் நிலையம் அருகில் இருந்து ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட கடல் பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கும் விசைப்படகுகளை தடுத்து நிறுத்தாத மீன்வளத் துறை அதிகாரிகளை கண்டித்தும் நூதன போராட்டம் நடந்தது.
கடல் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் சிவாஜி தலைமையில் மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி, மாவட்ட தலைவர் ஜஸ்டின், மாவட்ட பொருளாளர் சுடலைகாசி, ராமேசுவரம், பாம்பன் நடராஜபுரம், ஓலைக்குடா, மண்டபம்தோணித்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் சவப்பெட்டியை தோளில் சுமந்தபடி நூதன முறையில் தேசிய நெடுஞ்சாலையில் ஊர்வலமாக வந்தனர்.
காத்திருப்பு போராட்டம்
தொடர்ந்து தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள மீன்துறை அலுவலகம் முன்பு சவப்பெட்டியுடன் அமர்ந்து மீனவர்கள் நேற்று 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருப்பு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து அதிகாரிகள் யாரும் வராததால் வளாகத்திலேயே கஞ்சித் தொட்டி திறந்து மீனவர்கள் அனைவரும் அங்கேயே அமர்ந்து சாப்பிட்டனர்.
அதன் பின்னர் பகல் 3 மணி அளவில் போராட்டம் நடத்திய மீனவர்களுடன் மீன்துறை துணை இயக்குனர் பரிதி இளம்வழுதி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்கும் விசைப்படகுகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாகவும் கரையோரத்தில் உள்ள கடல் பகுதியில் விசைப்படகுகள் மீன் பிடிக்காமல் இருப்பதை தடுக்கப்படும் என்றும் உறுதி கொடுத்ததின் பேரில் காத்திருப்பு போராட்டம் நடத்திய மீனவர்கள் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.
பரபரப்பு
மீன் துறை அதிகாரிகளை கண்டித்து மீனவர்கள் கஞ்சித் தொட்டி திறந்தும், சவப்பெட்டியை சுமந்தபடி ஒப்பாரி வைத்தும் நூதன முறையில் போராட்டம் நடத்தியது ராமேசுவரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story