பருவம் தவறிய மழையால் கொண்டைகடலை மகசூல் பாதிப்பு
பருவம் தவறிய மழையால் கொண்டைகடலை மகசூல் பாதிப்பு
குடிமங்கலம:-
குடிமங்கலம் பகுதியில் பருவம் தவறிய மழை காரணமாக கொண்டைகடலை மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது.
கொண்டைகடலை சாகுபடி
குடிமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மானாவாரியில் கொண்டைகடலை சாகுபடி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் பெய்யும் பனியை கருத்தில் கொண்டு கொண்டைகடலை சாகுபடி நடைபெறுகிறது. இப்பகுதிகளில் கரிசல் மண் அதிக அளவு காணப்படுவதால் கொண்டைகடலை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கொண்டைகடலை பயிர்கள் பனியில் பூ பூத்து காய்க்கும் தன்மை கொண்டது. இந்த ஆண்டு குடிமங்கலம் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக பனிக்கு பதிலாக மழையின் காரணமாக கொண்டைகடலை மகசூல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் சராசரி மழை அளவு 60.60 மில்லி மீட்டர் ஆகும்.ஆனால் இந்த ஆண்டு மூன்று மாதங்களில் மட்டும் 443.20 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. கொண்டைகடலை சாகுபடி குறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது:-
மகசூல் பாதிப்பு
குடிமங்கலம் பகுதியில் கொண்டைகடலை சாகுபடிக்கு ஏற்ற கரிசல் மண் காணப்படுவதால் விவசாயிகள் விரும்பிப் பயிரிட்டு வருகிறார்கள். ஒரு ஏக்கர் சாகுபடி செய்ய 30 கிலோ கொண்டைகடலை விதை தேவைப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு உழவு, களை எடுத்தல், மருந்து தெளித்தால், உரமிடுதல், என 35 ஆயிரம்முதல் 40 ஆயிரம்வரை செலவாகிறது. கொண்டைகடலை 85 முதல் 95 நாட்களுக்குள் அறுவடைக்கு தயாராகிவிடும்.
இந்த ஆண்டு கொண்டைகடலை சாகுபடி செய்த டிசம்பர் மாதத்திற்கு பிறகு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பெய்த மழையின் காரணமாக கொண்டைகடலை மகசூல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பனிக்கு பதிலாக மழை பெய்து அதன் காரணமாக பல இடங்களில் விளை நிலங்களில் தண்ணீர் தேங்கி சாகுபடி செய்யப்பட்ட கொண்டைகடலை செடிகள் முற்றிலும் அழுகி விட்டன. இதனால் மகசூலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏக்கருக்கு மானாவாரி சாகுபடியில் அதிகபட்சமாக 400 கிலோ வரை மகசூல் கிடைக்கும் நிலையில் இந்த ஆண்டு மிகவும் குறைந்து காணப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story