புகாரை விசாரிக்க சென்ற தாசில்தார் தடுத்து நிறுத்தம்


புகாரை விசாரிக்க சென்ற தாசில்தார் தடுத்து நிறுத்தம்
x
தினத்தந்தி 26 Feb 2021 6:03 PM GMT (Updated: 26 Feb 2021 6:03 PM GMT)

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் பள்ளப்பட்டி ஊராட்சியில் துணைத்தலைவர் மீது வார்டு உறுப்பினர்கள் கொடுத்த புகாரை விசாரிக்க சென்ற தாசில்தாரை தடுத்து நிறுத்தி தி.மு.க.வினர் முற்றுகையிட்டனர். இதை தடுக்க வந்த போலீசாருடன் அவர்கள் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்:

கலெக்டரிடம் புகார்
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் பள்ளப்பட்டி ஊராட்சியில் தலைவராக தி.மு.க.வை சேர்ந்த பரமன், துணை தலைவராக தனலட்சுமி  உள்ளனர். மேலும் 15 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். 

இதில் 8-வது வார்டு உறுப்பினர் சக்திவேல், 15-வது வார்டு உறுப்பினர் ஆர்த்தி பிரியா உள்பட 12 உறுப்பினர்கள் கலெக்டர் விஜயலட்சுமியிடம் ஒரு புகார்மனு கொடுத்தனர்.

அதில் துணை தலைவர் தனலட்சுமி, ஊராட்சிக்கான வளர்ச்சி பணிகள் எதையும் முறையாக செய்வதில்லை. அவர் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

தாசில்தார் முற்றுகை
இதையடுத்து அந்த புகார் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்படி திண்டுக்கல் மேற்கு தாசில்தார் அபுரீஸ்வரனுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். 

அதன்படி தாசில்தார் மற்றும் அதிகாரிகள் வார்டு உறுப்பினர்களிடம் விசாரணை நடத்துவதற்காக பள்ளப்பட்டி ஊராட்சி அலுவலகத்துக்கு நேற்று காலை சென்றனர்.

இது பற்றி தகவலறிந்து அங்கு வந்த தி.மு.க.வினர் தாசில்தார் மற்றும் அதிகாரிகளை ஊராட்சி அலுவலகத்துக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி முற்றுகையிட்டனர். 

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணிக்காக நின்றிருந்த தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வம் தலைமையிலான போலீசார் அவர்களை தடுக்க முயன்றனர். அப்போது தி.மு.க.வினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

போராட்டம் நடத்துவோம்
பின்னர் தாசில்தார் மற்றும் அதிகாரிகள் வார்டு உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தாமலேயே அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டனர். 

அதையடுத்து ஊராட்சி தலைவர், துணை தலைவர் ஆகியோர் துணை தலைவர் மீது புகார் கொடுத்த 12 வார்டு உறுப்பினர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். 

ஆனால் அது தோல்வியில் முடிந்தது. பின்னர் வார்டு உறுப்பினர்கள் நிருபர்களிடம் கூறுகையில், பள்ளப்பட்டி ஊராட்சி துணை தலைவர் வளர்ச்சி பணிகளை முறையாக செய்வதில்லை. மேலும் பெண் வார்டு உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு இல்லை.

எனவே துணை தலைவரை நீக்கம் செய்ய வேண்டும். அதுவரை நாங்கள் போராட்டம் நடத்துவோம். மேலும் தாசில்தாரை விசாரணை நடத்த விடாமல் தடுத்தது குறித்து போலீசாரிடமும், மாவட்ட கலெக்டரிடமும் புகார் கொடுப்போம் என்றனர். 

விசாரணை நடத்துவதற்காக சென்ற தாசில்தாரை தி.மு.க.வினர் முற்றுகையிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story