குளமங்கலம் அய்யனார் கோவிலில் பிரமாண்ட குதிரை சிலைக்கு காகிதப்பூ மாலைகள் குவிந்தன மாசிமகத் திருவிழா ஒரு நாள் முன்னதாக தொடங்கியது


குளமங்கலம் அய்யனார் கோவிலில்  பிரமாண்ட குதிரை சிலைக்கு காகிதப்பூ மாலைகள் குவிந்தன  மாசிமகத் திருவிழா ஒரு நாள் முன்னதாக தொடங்கியது
x
தினத்தந்தி 27 Feb 2021 12:25 AM IST (Updated: 27 Feb 2021 12:25 AM IST)
t-max-icont-min-icon

குளமங்கலம் பெருங்காரையடி மிண்ட அய்யனார் கோவில் மாசிமகத் திருவிழா கொரோனா பரவலை தடுக்க ஒரு நாள் முன்னதாக தொடங்கியது. பிரமாண்ட குதிரை சிலைக்கு காகிதப்பூ மாலைகள் குவிந்தன.

கீரமங்கலம்:
மாசிமகத் திருவிழா
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் கிராமத்தில் வில்லுனி ஆற்றங்கரையில் ஆசியாவிலேயே உயரமான 33 அடி உயரம் கொண்ட குதிரை சிலையுடன் எழுந்தருளியுள்ள பெருங்காரையடி மிண்ட அய்யனார் கோவில் மாசிமகத் திருவிழா 2 நாட்கள் நடத்தப்படுவது வழக்கம். இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி பிரமாண்ட குதிரை சிலைக்கு அதே உயரத்தில் காகிதப் பூ மாலை அணிவிப்பதும், மறு நாள் இரவு தெப்பத் திருவிழாவும் தான்.
இந்த பிரமாண்ட குதிரை சிலைக்கு பக்தர்கள் காணிக்கையாக அணிவிக்கும் காகிதப்பூ மாலைகள் கீரமங்கலம், கொத்தமங்கலம், குளமங்கலம், திருநாளூர், மறமடக்கி, ஆவணத்தான்கோட்டை, திருச்சிற்றம்பலம் ஆகிய பல கிராமங்களில் கடந்த ஒரு மாதமாக மாலைகள் கட்டப்பட்டு வந்தது.
ஒரு நாள் முன்னதாக மாலைகள் அணிவிக்கப்பட்டன
இந்த வருடம் மாசிமகம் இன்று (சனிக்கிழமை) என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசின் வழிகாட்டு முறைகளை கடைப்பிடிக்கவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், குதிரை சிலைக்கு ஒரு நாள் முன்னதாக மாலைகள் அணிவிக்க அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் முடிவு செய்தனர்.  
அதன்படி, நேற்று காலை 10 மணிக்கு கிராமத்தின் சார்பில் சிறப்பு வழிபாடுகள் செய்து தீபாராதணையுடன் முதல் மாலையாக மலர் மாலை அணிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நீண்ட வரிசையில் வாகனங்களில் ஏற்றிவரப்பட்ட காகிதப்பூ மாலைகளை பக்தர்கள் நேர்த்திக்கடனாக அணிவித்தனர். முதல் நாளிலேயே குதிரை சிலைக்கு நூற்றுக்கணக்கான மாலைகள் குவிந்தன.
இன்றும் தொடரும்
கூட்ட நெரிசலை தவிர்க்க நேற்று முதல் மாலைகள் அணிவிக்கப்பட்டதுடன் இன்றும் மாலைகள் அணிவிக்கப்படுகின்றன. மேலும் ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி, கரும்பில் தொட்டில் கட்டி குழந்தைகளை தூக்குதல் போன்ற நிகழ்ச்சிகளும் நடந்தது.

Next Story