முடி திருத்தும் தொழிலாளர்கள் உண்ணாவிரதம்


முடி திருத்தும் தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 26 Feb 2021 7:14 PM GMT (Updated: 26 Feb 2021 7:14 PM GMT)

மருத்துவர் சமூக மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வேண்டி முடி திருத்தும் தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்:
மருத்துவர் சமூக மக்களுக்கு 5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வேண்டியும், வன்கொடுமைகளில் இருந்து காக்க பாதுகாப்பு கோரியும், மருத்துவர் சமூக பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டியும் பெரம்பலூரில் மாவட்ட தமிழ்நாடு மருத்துவர் சமூக மத்திய சங்கம் மற்றும் தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்கத்தினர் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது. பாலக்கரையில் இருந்து பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையோரத்தில் நடந்த இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். பொருளாளர் கோவிந்தராஜ், அவைத் தலைவர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் மாநில இணை பொதுச் செயலாளர் குணசேகரன் கலந்து கொண்டு பேசினார். பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முடி திருத்தும் கடைகளை அடைத்து, தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். காலை 9 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரத போராட்டம் மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. முன்னதாக சங்கத்தின் நகர தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். முடிவில் செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார். முன்னதாக மாலையில் சட்டப்பேரவையில் 2.5 உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றியதால் முடி திருத்தும் தொழிலாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

Next Story