மாவட்டத்தில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம் தனியார் பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:
வேலை நிறுத்தம்
அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் 14-வது ஊதிய ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை நடத்தி நிறைவேற்ற கோரி நேற்று முன்தினம் முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் தொழிற்சங்கத்தினர் ஈடுபட்டனர். அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்திலும் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பணிக்கு செல்லவில்லை.
இதனால் அரசு பஸ்கள் குறைவான அளவில் இயக்கப்பட்டன. இந்த நிலையில் நேற்று தொடர்ந்து 2-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் அரசு பஸ்கள் குறைந்த அளவில் இயக்கப்பட்டன. பணிக்கு டிரைவர், கண்டக்டர்கள் பலர் வராததால் தற்காலிக பணியில் டிரைவர்களை நியமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
தனியார் பஸ்கள்
இந்த நிலையில் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் அரசு பஸ்கள் அதிகமாக இல்லாத நிலையில் தனியார் பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பயணிகள் அதில் ஏறி பயணம் மேற்கொண்டனர். இதேபோல மாவட்டத்தில் மற்ற இடங்களிலும் இதே நிலைமை தான். இதற்கிடையில் வருகிற சட்டமன்ற தேர்தல் தொடர்பாக தேதி நேற்று மாலை அறிவிப்பு வெளியானது. இதனால் அரசு பஸ் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் திரும்ப பெறப்பட்டு பணிக்கு திரும்புவார்கள் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
அதேநேரத்தில் சென்னையில் சங்க நிர்வாகிகளுடன் அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு பின் போராட்டம் தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என அரசு போக்குவரத்து கழக வட்டாரத்தில் தெரிவித்தனர்.
ஆலங்குடி
அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆலங்குடி அரசு போக்குவரத்துப்பணிமனை வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பாரதி தலைமை தாங்கினார். சிவக்குமார், மெய்யநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அறந்தாங்கி
அறந்தாங்கி அரசு பணிமனை முன் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்த்திற்கு தொழிலாளர் சங்க கிளை செயலாளர் யோகராஜ் தலைமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story