மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன எம்.எல்.ஏ. அலுவலகங்களுக்கு சீல்
சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியானதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.
புதுக்கோட்டை:
6 சட்டமன்ற தொகுதிகள்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தேதி தொடர்பாக நேற்று மாலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. வருகிற ஏப்ரல் மாதம் 6-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான நிலையில் தேர்தல் நடத்தை விதி முறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. அதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. மாவட்டத்தில் புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை (தனி), விராலிமலை, ஆலங்குடி, அறந்தாங்கி, திருமயம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் 6 சட்டமன்ற தொகுதி உறுப்பினர்களின் அலுவலகங்கள் பூட்டி சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டன. தேர்தல் நடத்தை விதிகள் தளர்ந்த பின் இந்த அலுவலகங்கள் திறக்கப்படும்.
தேர்தல் கட்டுப்பாட்டு அறை
இதேபோல ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் பயன்படுத்திய அரசு வாகனங்கள், மாவட்ட ஊராட்சி தலைவரின் அரசு வாகனங்கள் உள்ளிட்டவற்றை அரசு அலுவலகத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அரசியல் கட்சியினர் விளம்பர படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ள பதாகைகளை அகற்ற தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக தமிழகம் வந்த துணை ராணுவ படையில் 100 வீரர்கள் இன்று (சனிக்கிழமை) புதுக்கோட்டை வருகை தருகின்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. இதில் ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு, 2 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் தொடர்பான தகவல்கள், புகார்கள், விவரங்கள், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் உள்ளிட்டவை இந்த கட்டுப்பாட்டு அறையில் இருந்து மாவட்டம் முழுவதும் சேகரிக்கப்பட்டு உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்படும்.
Related Tags :
Next Story