குளித்தலை கடம்பனேசுவரர் கோவிலில் மாசிமக தேரோட்டம்
குளித்தலை கடம்பனேசுவரர் கோவிலில் மாசிமக தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
குளித்தலை
கடம்பவனேசுவரர் கோவில்
கரூர் மாவட்டம், குளித்தலையில் பிரசித்தி பெற்ற கடம்பவனேசுவரர் கோவில் காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. இது தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலங்களில் இரண்டாவது தலமாகும். இக்கோவிலில் மாசி மகப் பெருந்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தேரோட்டம்
இதையடுத்து அன்றிலிருந்து தினந்தோறும் காலை பல்லக்கில் சுவாமியின் வீதி உலா நடைபெற்றுவருகிறது. இரவு நந்தி, யாளி, பூதம், அன்னம், கைலாச, கமல வாகனம், வெள்ளி ரிஷப வாகனம், யானை, கிளி, இந்திர விமானம், குதிரை வாகனம் ஆகியவற்றில் உற்சவ சாமிகளின் திருவீதி உலா நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது.
திரளான பக்தர்கள்
இதையொட்டி உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பலவகை வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சுவாமிகள் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடந்தது. தேர் கோவிலை சுற்றியுள்ள 4 வீதிகள் வழியாக வந்து நிலையை வந்தடைந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் தேங்காய், பூ, பழம் ஆகியவற்றை கொண்டு அர்ச்சனை செய்து சுவாமியை வழிபட்டனர். இதனையடுத்து இரவு சாமியின் வீதிஉலா நடைபெற்றது. இன்று (சனிக்கிழமை) குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், இரவு கற்பவிருட்சம், காமதேனு வாகனத்தில் சுவாமி திருவீதிஉலா நடைபெறவுள்ளது.
Related Tags :
Next Story