திருப்பூரில் பார் உரிமையாளரின் காதுகளை கடித்து துப்பிய 3 பேர் கைது
திருப்பூரில் பார் உரிமையாளரின் காதுகளை கடித்து துப்பிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அனுப்பர்பாளையம்
திருப்பூரில் பார் உரிமையாளரின் காதுகளை கடித்து துப்பிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பார் உரிமையாளர்
சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியை அடுத்த சாலைகிராமம் பகுதியை சேர்ந்தவர் வீரபிரபு என்ற குட்டி (வயது 33). இவர் திருப்பூர் பி.என்.ரோடு சாந்தி தியேட்டர் பின்புறம் உள்ள டாஸ்மாக் பாரை ஏலம் எடுத்து நடத்தி வருகிறார். இந்த பாரை ஏலம் எடுப்பது தொடர்பாக ஏற்கனவே குட்டியின் சொந்த ஊரை சேர்ந்த ராஜாவுக்கும் குட்டிக்கும் முன்விரோதம் இருந்தது.
அந்த பாரை குட்டி ஏலம் எடுத்ததால் அவர்மீது ராஜா ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அதிகாலை ராஜாவின் உறவினரான பிரபு குட்டியின் செல்போனுக்கு அழைத்து ரூ.15 ஆயிரம் கேட்டுள்ளார். இதற்கு குட்டி என்னிடம் பணம் இல்லை என்று கூறியதாக தெரிகிறது. இதையடுத்து பிரபு குட்டியிடம் உன்னிடம் தனியாக பேச வேண்டும். போயம்பாளையம் சந்திப்பில் உள்ள பேக்கரிக்கு வா என்று அழைத்துள்ளார். சிறிது நேரம் கழித்து ராஜா சொன்ன இடத்திற்கு குட்டி சென்றுள்ளார். ராஜா மற்றும் அவருடைய நண்பர்களான முத்து, காளி, தனபால், தினேஷ்பாபு, தமிழ்செல்வன் ஆகியோர் இருந்துள்ளனர். இவரை கண்டதும் 7 பேரும் சேர்ந்து பாரை ஏலம் எடுத்தது தொடர்பாக தகாத வார்த்தையால் திட்டி, காரில் இருந்த மரக்கட்டையை எடுத்து சரமாரியாக தாக்கினார்கள். வலியால் அலறி துடித்த குட்டி அங்கிருந்து தப்பி சென்றபோது அவருடைய இடது காதை ராஜாவும், வலது காதை காளியும் கடித்து கீழே துப்பினார்கள். இதன்பின்பு குட்டியை ஒரு காரில் ஏற்றி விஜயமங்கலத்தை தாண்டி சேலம் செல்லும் சாலையில் காட்டுப்பகுதியில் இறக்கி விட்டு, கொன்று விடுவோம் என்று மிரட்டி, 7 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர். பின்னர் குட்டி அவருடைய நண்பர் சுப்பையா என்பவர் உதவியுடன் திருப்பூர் வந்தார்.
3 பேர் கைது
இதை தொடர்ந்து படுகாயத்துடன் இருந்த அவர் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து குட்டி கொடுத்த புகாரின் பேரில் அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தனபால், தினேஷ்பாபு, தமிழ்செல்வன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ராஜா, முத்து, பிரபு, காளி ஆகிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story