ஸ்கூட்டரில் சென்ற பெண்ணை தாக்கி 5 பவுன் நகை பறிப்பு


ஸ்கூட்டரில் சென்ற பெண்ணை தாக்கி 5 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 27 Feb 2021 1:58 AM IST (Updated: 27 Feb 2021 1:58 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் பட்டப்பகலில் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணை தாக்கி 5 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

நாகர்கோவில், 
நாகர்கோவிலில் பட்டப்பகலில் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணை தாக்கி 5 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நகை பறிப்பு
இரணியல் அருகே ஆளூர் பெரும் செல்வவிளை பகுதியைச் சேர்ந்தவர் ரதி குமாரி (வயது 52). இவர் நேற்று காலை தனது வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் வந்தார். பின்னர் பொருட்கள் வாங்கி கொண்டு மீண்டும் தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.
வெல்லமன் ஓடை என்ற பகுதியில் சென்ற போது பின்னால் மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் வந்தார். ரதி குமாரியை திடீரென வழிமறித்த அவர், தாக்கி விட்டு கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்து விட்டு தப்பினார். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த தாக்குதலால் ரதி குமாரி நிலைகுலைந்து போனார். சிறிது நேரம் கழித்து அவர் திருடன்...திருடன்... என்று கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தனர். அதற்குள் அந்த வாலிபர் ஆசாரிப்பள்ளம் சாலையில் வேகமாக சென்று தப்பி விட்டார்.
கண்காணிப்பு கேமரா
இதனை தொடர்ந்து ஆங்காங்கே ரோந்து பணியில் இருந்த போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். அதன் பேரில் ஆசாரிபள்ளம் சுற்று வட்டார பகுதிகளில் வாகன சோதனை நடத்தி மர்ம நபரை தேடினர். ஆனால் மர்மநபர் சிக்கவில்லை.
இது தொடர்பாக ரதி குமாரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. நாகர்கோவிலில் பட்டப்பகலில் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணை தாக்கி நகை பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story