இன்று மாசிமக தீர்த்தவாரி கடலூர் சில்வர் பீச்சில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம் பாதுகாப்புக்காக 1200 போலீசார் குவிப்பு


இன்று மாசிமக தீர்த்தவாரி  கடலூர் சில்வர் பீச்சில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்  பாதுகாப்புக்காக 1200 போலீசார் குவிப்பு
x
தினத்தந்தி 27 Feb 2021 2:09 AM IST (Updated: 27 Feb 2021 2:09 AM IST)
t-max-icont-min-icon

இன்று மாசிமக தீர்த்தவாரி

கடலூர்,

மாசி மாதம் பவுர்ணமியும், மகம் நட்சத்திரமும் இணைந்து வரும் தினத்தையே மாசி மகம் என்று அழைக்கப்படுகிறது. மாசி மகத்தில் கோவில்களில் உள்ள உற்சவ மூர்த்திகளை கடற்கரைக்கு ஊர்வலமாக கொண்டு சென்று தீர்த்தவாரி நடத்துவது வழக்கம். அப்போது சாமிகளுடன் சேர்ந்து நீராடினால் சகல நன்மைகளும் வந்து சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இதனால் ஒவ்வொரு ஆண்டும் தீர்த்தவாரியின் போது கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குளித்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மாசிமக தீர்த்தவாரி இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.

தீர்த்தவாரி

இதற்காக கடலூர், விழுப்புரம் மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கோவில்களில் இருந்து உற்சவ மூர்த்திகளை மாலைகளால் அலங்கரித்து டிராக்டர், மினி லாரி போன்ற வாகனங்களில் ஊர்வலமாக பக்தர்கள் கொண்டு வருவார்கள். இந்த ஊர்வலம் கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு வந்ததும், அங்கு சாமிகளுக்கு தீர்த்தவாரி நடைபெறும். இந்த நிலையில் மாசிமக தீர்த்தவாரியில் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி மாசிமகம் நடைபெறும் இடங்களில் கடைகள் வைக்கவோ, ராட்டினம் உள்ளிட்டவை செயல்படவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

1200 போலீசார்

மேலும் மாசிமக தீர்த்தவாரிக்காக கடலூர் சில்வர் பீச்சில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் 2 உயர்கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அலங்கரித்து வைக்கப்படும் சாமிகளை, பக்தர்கள் பார்த்து செல்லும் வகையில் கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதேபோல் கிள்ளை முழுக்குத்துறை, சி.புதுப்பேட்டை, வல்லம்படுகை, கூடலையாத்தூர், விருத்தாசலம் மணிமுக்தாறு உள்ளிட்ட இடங்களிலும் இன்று சாமிகளுக்கு தீர்த்தவாரி நடக்கிறது. இதையொட்டி அசம்பாவித சம்பவம் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில், மாவட்டம் முழுவதும் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Next Story