மேட்டூர், ஓமலூர், எடப்பாடி, சங்ககிரியில் 100 ஏரிகளில் தண்ணீர் நிரப்பும் திட்டத்தின் சிறப்பம்சங்கள் என்ன?


மேட்டூர், ஓமலூர், எடப்பாடி, சங்ககிரியில் 100 ஏரிகளில் தண்ணீர் நிரப்பும் திட்டத்தின் சிறப்பம்சங்கள் என்ன?
x
தினத்தந்தி 27 Feb 2021 2:50 AM IST (Updated: 27 Feb 2021 2:50 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர், ஓமலூர், எடப்பாடி மற்றும் சங்ககிரியில் உள்ள 100 வறண்ட ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் திட்டம் குறித்த சிறப்பம்சங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சேலம்:
மேட்டூர், ஓமலூர், எடப்பாடி மற்றும் சங்ககிரியில் உள்ள 100 வறண்ட ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் திட்டம் குறித்த சிறப்பம்சங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேட்டூர் உபரிநீர்
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டும்போது திறந்து விடப்படும் உபரிநீர் சுமார் 164 டி.எம்.சி. அளவிற்கு கடலில் வீணாக கலந்தது. இந்த உபரிநீரை ஏரி, குளங்களுக்கு மின் மோட்டார் மூலம் நீரேற்றம் செய்து, விவசாயம் செழிக்கவும், நிலத்தடி நீர் மட்டம் உயரவும் வழி வகை செய்வதே இந்த சரபங்கா நீரேற்று பாசன திட்டம் ஆகும். 
கடந்த 2013-ம் ஆண்டு மேட்டூர் அணை நிரம்பி வினாடிக்கு ஒன்றரை லட்சம் கனஅடி உபரிநீர் வெளியேறியது. அதேபோல் கடந்த ஆண்டும் மேட்டூர் அணை திறக்கப்பட்டபோது உபரிநீர் கடலில் வீணாக கலந்தது. இதனை தொடர்ந்து மேட்டூர் உபரிநீர் திட்டதை செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மின் மோட்டார்கள்
இந்தநிலையில், மேட்டூர், ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி தொகுதிகளில் உள்ள 100 வறண்ட ஏரிகளுக்கு மேட்டூர் அணையின் உபரி நீரை நீரேற்று மூலம் வழங்கும் திட்டத்திற்கு ரூ.565 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு செய்து பணிகள் முழுவீச்சில் நடைபெற்று தற்போது விவசாய பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2 வழியில் செயல்படுத்தப்படுகிறது.
மேட்டூர் அணையின் 16 மதகு கண் பாலத்தின் அருகில் திப்பம்பட்டியில் பிரதான நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து எம்.காளிப்பட்டி ஏரி, வெள்ளாளபுரம் ஏரி, கன்னந்தேரி ஏரி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள துணை நீரேற்று நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும். திப்பம்பட்டி நீரேற்று நிலையத்தில் 940 குதிரைதிறன் கொண்ட 10 மின் மோட்டார்கள் மூலம் நீரேற்றம் செய்து 12 கி.மீட்டர் தூரத்திலுள்ள எம்.காளிப்பட்டி ஏரிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து 23 ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்படும்.
48 கிராமங்களில்...
அதாவது, காளிப்பட்டியில் இயற்கையாக உள்ள கால்வாய்கள் மூலம் மானத்தாள், மல்லிகுட்டை, தொளசம்பட்டி, பெரியேரிப்பட்டி, தாரமங்கலம் ஏரிகள் மற்றும் சிறு குட்டைகளை நிரப்பி சரபங்கா ஆற்றில் இணையும். மேலும், திப்பம்பட்டி நீரேற்று நிலையத்தில் 1,080 குதிரை திறன் கொண்ட 6 மின் மோட்டார்கள் மூலம் நங்கவள்ளி ஏரிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து 33 ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்படும்.
அதேபோல், வெள்ளாளபுரம் ஏரி துணை நீரேற்று நிலையத்தில் இருந்து வடுகப்பட்டி அருகே அமைக்கப்படும் கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து 14 ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பப்படும். கன்னந்தேரி துணை நீரேற்று நிலையத்தில் இருந்து ஒலக்கசின்னனூருக்கு அருகே அமைக்கப்படும் கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து 30 ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பப்படும். இத்திட்டத்தால் 8 ஒன்றியங்கள், 48 கிராமங்களில் மொத்தம் 4,238 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். 
நிலத்தடி நீர்மட்டம் உயரும்
ஏரிகளில் தண்ணீர் நிரப்புவதால் அந்த பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். இதன்மூலம் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவது தவிர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தால் மேட்டூர், மேச்சேரி, ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி பகுதிகளில் உள்ள ஏரிகளில் தண்ணீர் நிரப்புவதால் வறண்டு கிடக்கும் பகுதிகள் வளம் செழிக்கும் பகுதிகளாக மாறும். சேலம் மாவட்டத்தில் தொழில் வளமும் பெருகுவதோடு பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


Next Story