வாழப்பாடியில் தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட இளம்பெண், குழந்தை பலி போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு


வாழப்பாடியில் தனியார் மருத்துவமனையில்  பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட இளம்பெண், குழந்தை பலி போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 27 Feb 2021 2:50 AM IST (Updated: 27 Feb 2021 2:50 AM IST)
t-max-icont-min-icon

வாழப்பாடியில் தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப் பட்ட இளம்பெண்ணும், குழந்தையும் பலியானார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள், நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வாழப்பாடி:
வாழப்பாடியில் தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப் பட்ட இளம்பெண்ணும், குழந்தையும் பலியானார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள், நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கர்ப்பிணி
சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த வேப்பிலைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். தையல் தொழிலாளி. இவருடைய மகள் பிரியதர்ஷினி (வயது 22).
மருத்துவ பரிசோதகர் பயிற்சி பெற்ற இவருக்கும், திருமனூர் கிராமத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் நவீன்குமார் (29) என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் பிரியதர்ஷினி கர்ப்பம் ஆனார்.
குழந்தை சாவு
கர்ப்பிணி பிரியதர்ஷினிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், வாழப்பாடியில் ஒரு தனியார் மருத்துவமனைக்கு கடந்த 23-ந் தேதி அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது பிரியதர்ஷினிக்கு பெண் டாக்டர் சிகிச்சை அளித்து வீட்டுக்கு அனுப்பியுள்ளார். மறுநாள் காலை பிரியதர்ஷினி உடல்நிலை பாதிக்கப்பட்டதால் இதே மருத்துவமனைக்கு மீண்டும் அழைத்து சென்றுள்ளனர். அப்போது பிரியதர்ஷினிக்கு அறுவை சிகிச்சை செய்த பெண் டாக்டர், வயிற்றிலேயே ஆண் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
தாயும் பலி
இதனையடுத்து பிரியதர்ஷினிக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டது. இதனால் மேல் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் காலை சேலம் சீலநாயக்கன்பட்டியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
பிரசவத்திற்காக வாழப்பாடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண்ணும், குழந்தையும் பலியானதால் உறவினர்கள் ஆத்திரம் அடைந்தனர்.
சாலைமறியலுக்கு முயற்சி
பின்னர் தனியார் மருத்துவமனை நடத்தி வரும் டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி சாலை மறியல் செய்ய முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் வாழப்பாடி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இச்சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வாழப்பாடி துணை சூப்பிரண்டு வேலுமணி, இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட இளம்பெண்ணின் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
விசாரணை
இதுதொடர்பாக நவீன் குமார் கொடுத்த புகாரின் பேரில், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த இளம்பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அடக்கம் செய்யப்பட்ட ஆண் குழந்தை உடலை தாசில்தார் முன்னிலையில் தோண்டி எடுத்து உடற்கூறாய்வு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.


Next Story