கும்பகோணத்தில் மாசிமக தீர்த்தவாரி
கும்பகோணத்தில் நடந்த மாசிமக தீர்த்தவாரியையொட்டி மகாமககுளத்தில் திரளான பக்தர்கள் புனித நீராடினர்.
கும்பகோணம்:
கும்பகோணத்தில் நடந்த மாசிமக தீர்த்தவாரியையொட்டி மகாமககுளத்தில் திரளான பக்தர்கள் புனித நீராடினர்.
தீர்த்தவாரி
கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற மாசி மக விழா கடந்த 17-ந்தேதி சிவன் கோவில்களிலும், 18-ந தேதி வைணவ கோவில்களிலும் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் சாமி, அம்பாள் வீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி நேற்று மகாமக குளத்தில் நடைபெற்றது. இதையொட்டி கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர், காசி விஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர், கோடீஸ்வரர், அமிர்தகலசநாதர், கம்பட்ட விஸ்வநாதர், நாகேஸ்வரர், வியாழ சோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், பாணபுரீஸ்வரர் ஆகிய 12 சிவன் கோவில்களில் இருந்து விநாயகர், சுப்ரமணியர், சாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்தி சாமிகள் தனித்தனி வாகனங்களில் சிறப்பு மலர் அலங்காரத்தில் அஸ்திரதேவர் தீர்த்தவாரி மூர்த்தியுடன் அந்தந்த கோவில்களிலிருந்து வீதி உலா புறப்பட்டனர். இந்த வீதி உலா மதியம் 12 மணிக்கு மகாமககுளம் வந்தடைந்தது.
அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேகம்
பின்னர் மகாமகம் குளத்தின் 4 கரைகளிலும் அமைக்கப்பட்டிருந்த பிரத்யேக பந்தல்களில் பஞ்சமூர்த்தி சாமிகள் நிறுத்தி வைக்கப்பட்டு மகாமக குளத்தில் அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து ஒரே நேரத்தில் 12 அஸ்திர தேவர் மூர்த்திகளும் மகாமக குளத்தில் எழுந்தருளினர். அப்போது குளத்தின் 4 பக்க கரைகளிலும் திரளான பக்தர்கள் கூடி நின்று புனிதநீராடி சாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் திரளான பக்தர்கள் திரண்டதால் நகர் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் போலீசார் பக்தர்கள் வந்து செல்ல வசதியாக வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி அனுப்பினர். மகாமக குளத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் குடங்களில் தண்ணீரை எடுத்து பொதுமக்கள் மேல் ஊற்றி அவர்களுக்கு உதவினர். மேலும் ஆங்காங்கே சுகாதார பணியாளர்கள் பக்தர்களுக்கு கிருமிநாசினி வழங்கி தேவையான பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். தீயணைப்பு படை வீரர்கள் குளத்தில் ரப்பர் படகில் சென்று பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகளை செய்து கொடுத்தனர்.
போலீசார் அனுமதி
முன்னதாக கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மகாமக குளத்தில் பக்தர்கள் நீராட அனுமதி இல்லை என தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்திருந்தார். இதற்கு பக்தர்கள் தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, நேற்று காலை முதல் பக்தர்கள் நீராட போலீசார் அனுமதி அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story