தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி கோவில் தேரோட்டம்


தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 27 Feb 2021 3:51 AM IST (Updated: 27 Feb 2021 4:47 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

தென்காசி:

தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

மாசி மகப் பெருவிழா

பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மகப் பெருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையில் அபிஷேக தீபாராதனையும், இரவில் மண்டகப்படி தீபாராதனையும் அதைத்தொடர்ந்து சுவாமி - அம்பாள் வீதி உலாவும் நடைபெற்று வருகிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் சுவாமி - அம்பாள் தேருக்கு எழுந்தருளல் நடைபெற்றது. பின்னர் காலை 9 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. முதலில் சுவாமி தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேர் நான்கு ரத வீதிகளிலும் சுற்றி 9.45 மணிக்கு நிலையத்தை அடைந்தது. 

பக்தி கோஷம் 

பின்னர் அம்மன் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேரும் நான்கு ரதவீதிகளில் சுற்றி 10.45 மணிக்கு நிலையத்தை அடைந்தது. தேரோட்டத்தின்போது பஞ்ச வாத்தியங்கள் மற்றும் மேளதாளங்கள் முழங்கின. பக்தர்கள் பக்தி கோஷமிட்டனர்.

தேரோட்ட திருவிழாவில் இந்து சமய அறநிலையத்துறை தூத்துக்குடி மண்டல இணை ஆணையர் அன்புமணி, தென்காசி மாவட்ட உதவி ஆணையர் அருணாச்சலம், குற்றாலம் கோவில் உதவி ஆணையர் கண்ணதாசன், தென்காசி கோவில் நிர்வாக அதிகாரி யக்ஞ நாராயணன், கோவில் ஆய்வாளர் கலாமணி உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Next Story