14 வயது சிறுமிக்கு கட்டாய தாலி கட்டிய வாலிபர்; போக்சோ சட்டத்தில் கைது


14 வயது சிறுமிக்கு கட்டாய தாலி கட்டிய வாலிபர்; போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 27 Feb 2021 6:03 PM IST (Updated: 27 Feb 2021 6:03 PM IST)
t-max-icont-min-icon

ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்த வாலிபர், வீடு புகுந்து 14 வயது சிறுமிக்கு கட்டாய தாலி கட்டினார். அவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

கட்டாய தாலி கட்டினார்
திருவேற்காட்டை சேர்ந்த 14 வயது சிறுமி, வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவரது உறவினரான விஜய் (வயது 26) என்பவர் சிறுமியின் வீட்டுக்குள் புகுந்து, தனியாக இருந்த சிறுமியின் கழுத்தில் கட்டாய தாலி கட்டினார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.வெளியே சென்றிருந்த சிறுமியின் பெற்றோர் வீட்டுக்கு திரும்பி வந்தனர். அவர்களிடம், சிறுமி நடந்த விவரங்களை கூறி அழுதார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், இதுபற்றி பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

ஏற்கனவே 2 திருமணம்
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த விஜயை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், கியாஸ் பழுது பார்க்கும் வேலை செய்து வருவதும், ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்து கொண்ட அவர், 3-வதாக வீடு புகுந்து சிறுமிக்கு கட்டாய தாலி கட்டியதும் தெரியவந்தது.

இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் விஜயை கைது செய்த போலீசார், மேலும் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

Next Story