சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் உரிய ஆவணமின்றி ரெயிலில் கொண்டு வந்த ரூ.20 லட்சம் பறிமுதல்
சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் தேர்தல் சிறப்பு குழுவுடன் இணைந்து ரெயில்வே பாதுகாப்புப்படை சப்-இன்ஸ்பெக்டர்கள் விக்கி மற்றும் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது விஜயவாடாவில் இருந்து சென்னை சென்டிரல் வந்த பினாகினி எக்ஸ்பிரஸ் ரெயில் நடைமேடை எண் 4-ல் வந்து நின்றது. அதில் இருந்து சந்தேகத்துக்கிடமாக இறங்கிய 2 பேரை ரெயில்வே பாதுகாப்புப்படையினர் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். சந்தேகமடைந்த பாதுகாப்புப்படை மற்றும் தேர்தல் சிறப்பு குழு போலீசார் அவர்களது பைகளை சோதனை செய்தனர். அப்போது அவர்கள் 2 பேரின் பைகளிலும் கட்டுக்கட்டாக தலா ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ.20 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது. இது குறித்து நடத்திய விசாரணையில், அவர்கள் 2 பேரும் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த ஹைதர் (வயது 55) மற்றும் யூசுப் அலி (40) என்றும், நெல்லூரில் உள்ள அவர்கள் வேலை செய்யும் கிளை நிறுவனத்தில் இருந்து, நெல்லையில் உள்ள நிறுவனத்துக்கு பணத்தை எடுத்து செல்வதாகவும் தெரிவித்தனர்.
உரிய ஆவணம் இல்லாததால், ரூ.20 லட்சம் பணத்தையும், 2 செல்போன்களையும் பறிமுதல் செய்த ரெயில்வே பாதுகாப்புப்படை மற்றும் தேர்தல் சிறப்பு குழு போலீசார் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து 2 பேரிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story