பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 27 Feb 2021 7:10 PM IST (Updated: 27 Feb 2021 7:10 PM IST)
t-max-icont-min-icon

ஆறுமுகநேரி அருகே பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆறுமுகநேரி, பிப்:
ஆறுமுகநேரியில் பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பிளஸ்-2 மாணவர்

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி ராஜமன்யபுரத்தை சேர்ந்தவர் கோபால். இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு சக்தி என்ற மனைவியும், சிவசங்கரன் (வயது 17) என்ற மகனும் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். சிவசங்கரன் காயல்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
சிவசங்கரன் வழக்கம்போல் காலையில் பள்ளிக்கு சென்று விட்டு, மாலையில் மளிகை கடைக்கு வந்தார். அங்கு இருந்த பெற்றோரிடம் வீட்டு சாவியை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.

தூக்குப்போட்டு தற்கொலை

மாலையில் அவர் தட்டச்சு பயிற்சிக்கு செல்வது வழக்கம். இந்த பயிற்சிக்கு செல்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சாவியை தன்னிடம் தரவில்லையே என்ற சந்தேகத்தில் தந்தை கோபால் தனது மகனுக்கு போன் செய்துள்ளார். ஆனால், அவர் பதிலளிக்கவில்லை. எனவே, மகனை தேடி வீட்டுக்கு சென்றார். அங்குள்ள படுக்கை அறை கதவு பூட்டி இருந்த நிலையில் ஜன்னல் வழியாக பார்த்தபோது சிவசங்கரன் மின்விசிறியில் சேலையால் தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்தார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக தனது மகனை கீழே இறக்கி திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே சிவசங்கரன் இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் ஆறுமுகநேரி போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.

காரணம் என்ன?

மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து மாணவர் சிவசங்கரனின் தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிளஸ்-2 மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story